நீதிமன்ற உத்தரவை மீறி அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம், எதிர்காலத்தில் கருத்துகளை பதிவிடும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கூறி இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கர் தம்மை பற்றி தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், அதற்கு தடைவிதிக்க கோரியும், மான நஷ்ட ஈடாக 2 கோடி ரூபாய் வழங்கவும் உத்தரவிடக் கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவிட்ட பின்னரும் தம்மை பற்றி அவதூறு கருத்துகளை கூறி வருவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள நீதிபதி குமரேஷ் பாபு, நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் அவதூறு கருத்து பதிவிட்டதற்காக சவுக்கு சங்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், தனது பதிவு குறித்து சவுக்கு சங்கர் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள நீதிபதி, இனி கருத்துகளை பதிவிடும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கூறி, செந்தில்பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார்.