தம்புத்தேகம அரச வைத்தியசாலையில் பணியாற்றிய 35 வயதுடைய வைத்தியர் ஒருவர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புத்தேகம வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் கடமையாற்றிய கொட்டப்பிட்டியைச் சேர்ந்த அமில சதகெலும் திசாநாயக்க (35) என்ற வைத்தியரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த வைத்தியர் நாரம்மல பகுதியில் தற்போது வசிக்கிறார்.
மூன்று நாட்களாக வைத்தியர் பணிக்கு வரவில்லை என வைத்தியசாலை ஊழியர் ஒருவர் வைத்தியரின் வீட்டிற்கு வந்து பார்த்த போது, அறையில் வைத்தியர் இறந்து கிடப்பதைக் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த வைத்தியரின் மனைவி குரானகல வைத்தியசாலையில் பல் வைத்தியராக கடமையாற்றி வருவதுடன்ஈ அவர் தனது ஐந்து வயது மகளுடன் அந்தப் பிரதேசத்தில் வசித்து வருகின்றார்.
உயிரிழந்த வைத்தியர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனியாக வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்திருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.அவரது சடலத்தில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.