25.7 C
Jaffna
January 2, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

‘எவ்வளவு பணம் என்றாலும் பரவாயில்லை… அவர்தான் வேண்டும்’; திமுக வழக்கிற்காக ஜிஜி பொன்னம்பலத்தை அழைத்து வரக்கேட்ட கருணாநிதி: ஆனந்தசங்கரி தகவல்!

1976ஆம் ஆண்டு, மு.கருணாதிநிதி தலைமையிலான தி,மு.க அரசை கலைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிரான வழக்கில் ஜிஜி பொன்னம்பலம் முன்னிலையாவதற்கு தானே காரணமாக இருந்ததாக தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழ் பக்கத்துடன் இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

“தமது அரசை கலைத்ததற்கு எதிரான வழக்கில் சட்டத்தரணி ஜிஜி பொன்னம்பலம் தமது தரப்பில் முன்னிலையாக வேண்டுமென கோரி இரண்டு மூன்று பேர் மூலம் கலைஞர் கருணாநிதி தூது விட்டிருந்தார். எனினும் ஜிஜி அதை மறுத்துவிட்டார். நான் தமிழகத்துக்கு போன சந்தர்ப்பம் ஒன்றில், என்னையும் மணவை தம்பியின் மகனையும் கருணாநிதி தனியாக சந்தித்தார். தமது வழக்கில் ஜிஜி பொன்னம்பலத்தை முன்னிலையாக உதவி செய்ய முடியுமா என கருணாநிதி கேட்டார். எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் பிரச்சனை இல்லை அவரை அழைத்துவர முடியுமா என கேட்டார். பணம் ஒரு விடயம் அல்ல நான் அதற்கு முயற்சி செய்கிறேன் என கூறினேன்.

நான் அதன்பின் திருச்சிக்கு வந்து விட்டேன். அங்குள்ள இளைஞர்களுடன் சந்திப்பு ஒன்றில் இந்த சம்பவத்தை சொன்ன பொழுது அவர்கள் என்னை பேசினார்கள். ஏன் தாமதிக்கிறீர்கள் எவ்வளவு பணமானாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் ஏறுங்கள் என கிட்டத்தட்ட பலவந்தமாக இந்த விமானத்தில் ஏற்றி இலங்கைக்கு அனுப்பி விட்டார்கள்.

நான் பலாலியில் இறங்கி நண்பன் ஸ்ரீதரனிடம் எனது பையை கொடுத்துவிட்டு உடனடியாகவே விமானம் எறி கொழும்புக்கு சென்றேன். ஜிஜி இடம் சென்று விஷயத்தைச் சொன்ன பொழுது அவர் மறுத்து விட்டார். நான் அவர் காலில் விழாத குறையாக மன்றாடி மன்றாடி தொடர்ந்து கேட்டதால் இறுதியில் சம்மதித்தார்.

அந்த சந்திப்பை புகைப்படங்களை எடுத்துக் கொண்டு நான் மீண்டும் தமிழகம் சென்றேன். கருணாநிதியின் வீட்டில் சந்தித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் அங்கு சென்றபோது அங்கு அவரது அமைச்சரவையில் இருந்த அனைவரும் காத்திருந்தார்கள்.

எடுத்த புகைப்படங்களை கொடுத்து மறுநாள் ஜிஜி வரும் தகவலை தெரிவித்தேன். கருணாநிதி என்னை அழைத்துக் கொண்டு அந்த புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டு சென்று பத்திரிகையாளர்களை சந்தித்து தகவலை தெரிவித்தார்.

மறுநாள் ஜிஜியை வரவேற்பதற்காக நானும் ராதாகிருஷ்ணன் இரவு 11 மணிக்கு விமான நிலையத்துக்கு சென்றோம். அங்கு ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் ஜிஜியை வரவேற்பதற்காக காத்திருந்தனர். ஆனால் ஒரு சிறு சத்தம் கூட இல்லை. ஜி ஜி. இறங்கி நடந்து வரும் பொழுது அவரது காலடி சத்தம் மட்டுமே கேட்டது. அவர் வெளியில் வரும் பொழுது குழுமியிருந்தவர்கள் “தமிழர் தலைவர் பொன்னம்பலவாணர் வாழ்க“, “தமிழர் தலைவர் பொன்னம்பலவாணருக்கு ஜே“ என கோசம் எழுப்பினர்.

ஜிஜி அந்த வழக்கில் முன்னிலையாகி சுமார் 30 நிமிடம் அளவில் தான் வாதாடினார். கருணாநிதியின் அரசுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து சிஐடியினர் என்னைப் பின் தொடர் தொடங்கினார்கள். அங்கு நிற்பது அவ்வளவு நல்லதல்ல என்பதால் ஸஜஜிக்கு சொல்லிவிட்டு இந்தியாவிலிருந்து புறப்பட்டேன். திருவனந்தபுரத்துக்கு பஸ்ஸில் வந்து, அங்கிருந்து விமானத்தில் இலங்கை வந்தோம். எம்முடன் குமார் பொன்னம்பலமும் வந்தார்.

ஜிஜி இறுதியாக பேசிய தமிழ் எம்.பி நான்தான். அதன்பின் அவர் சென்னையிலிருந்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு சென்றார். சிங்கப்பூர், மலேசியாவில் அவருக்கு எஸ்டேட்கள், சொத்தக்கள் இருந்தன. மலேசியாவில் காலமாகி இலங்கைக்கு அவரது உடல் எடுத்து வரப்பட்டது“ என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

திருகோணமலை கடற்கரையில் பெண்ணின் சடலம்

east tamil

சைபர் தாக்குதலுக்கு இலக்கானது இலங்கை பொலிஸ் யூடியூப் சேனல்

east tamil

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே; பேச்சாளர் சுமந்திரன்; பலர் நீக்கம்!

Pagetamil

Leave a Comment