24 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இலங்கை

எழுத்தாளர் தெணியானின் சிலை திறப்பு!

கடந்த ஆண்டு மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியான் (கந்தையா நடேசு) அவர்களின் முதலாம் ஆண்டு சிரார்த்த தின நிகழ்வும், உருவச்சிலை திறப்பு நிகழ்வும், ”ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் – தெணியான்” நூல் வெளியீடும் யாழ்ப்பாணம் – வடமராட்சி பிரதேசத்தின் கரவெட்டி – கொற்றாவத்தையில் அமைந்துள்ள அவர் வாழ்ந்த வீட்டில் நேற்று சனிக்கிழமை (10) காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மாநகரசபை ஆணையாளரும் கவிஞருமான இ.த. ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து
தெணியான் அவர்களின் உருவச் சிலையினையும், கல்வெட்டினையும் மல்லாகம் நீதிமன்றின் பதில் நீதவானும், சட்டத்தரணியுமான சோ. தேவராஜா அவர்கள் திறந்து வைத்தார். தொடர்ந்து தெணியான் அவர்களின் மனைவி மரகதம் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தார்.

சோ. தேவராஜா அவர்களின் திறப்புரையினை தொடர்ந்து நூல் வெளியீட்டுரையையும் கருத்துரையினையும் எழுத்தாளர் மு. அநாதரட்சகன் நிகழ்த்தினார். தொடர்ந்து தெணியான் பற்றிய நினைவுப் பகிர்வினை கலாநிதி ந. ரவீந்திரன் அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து சிலையை வடிவமைத்த இளம் சிற்பியான கெங்காதரன் இந்துசன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

தெணியானின் குடும்பத்தவர்களுடன் இணைந்து நிகழ்வை ஏற்பாடு செய்த ஜீவநதி இதழின் பிரதம ஆசிரியர் கலாமணி பரணீதரன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்வில் கிராமத்தவர்கள், எழுத்தாளர்கள், ஆர்வலர்கள், வாசகர்கள், கல்வியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றில் 1964 ஆம் ஆண்டு முதல் 58 வருடங்கள் இலக்கியப் பணி ஆற்றியுள்ளார். ஒரு கல்வியலாளனாக, ஆசிரியராக, சமூக மாற்றத்துக்காக குரல் கொடுத்து செயற்பட்ட சமூகப் போராளியாக விளங்கிய அவர் 14 நாவல்கள் 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 50 க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 30 க்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்து நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை படைத்துள்ளார். அரசின் உயர்விருதான சாகித்திய ரத்னா விருதைப் பெற்றவர்.

சிறுபான்மை தமிழர் மகாசபையின் தலைவராகவும், ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும் சேவையாற்றியதோடு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்றுமே ஓங்கி ஒலித்த குரல் தெணியானின் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அரசியல் தலையீடு

east tamil

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது நினைவு தினம்

Pagetamil

கார் கதவு திறக்கப்படாததால் வவுனியா இளைஞன் கனடாவில் உயிரிழப்பு

east tamil

வடக்கில் மீளவும் சிங்கள குடியேற்றம்

east tamil

யாழ் மக்கள் அச்சப்படத் தேவையில்லை

Pagetamil

Leave a Comment