றோயல் பார்க்கில் இவோன் ஜோன்சன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் ஷமந்த ஜயமஹாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டவிரோதமாகமன்னிப்பு வழங்கியுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் நேற்று (9) தெரியவந்துள்ளது. ஜனாதிபதியின்
விசேட ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க முடியாது என சட்ட செயலாளர் ஏற்கனவே அவருக்கு அறிவித்திருந்தார்.
இந்த மன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி சட்டமா அதிபரின் ஆலோசனைகளையோ நீதி அமைச்சரின் பரிந்துரைகளையோ பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
றோயல் பார்க் கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஜூட் ஷமந்த ஜயமஹாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பான ஆவணம் சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போதே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன. நீதிபதிகள் எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஜூட் ஷமந்த ஜயமஹாவுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பான கோப்பு, சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளேவினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
கோப்பில் உள்ள சில ஆவணங்கள் மீது நீதிமன்றத்தின் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
மனுதாரர் தரப்பு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உரிய பொதுமன்னிப்பு வழங்கும் போது சட்டமா அதிபரிடமிருந்து ஆலோசனைகள் எதுவும் பெறப்படவில்லை எனவும் பொருத்தமான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையை பின்பற்றாமல் இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும்போது, அசல் வழக்கை விசாரித்த பெஞ்ச் அல்லது நீதிபதியிடமிருந்து அறிக்கையைப் பெற வேண்டும், மேலும் மேன்முறையீடுகளை விசாரித்த நீதிமன்றங்களிலிருந்தும் அறிக்கைகளைப் பெற வேண்டும், பின்னர் அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி ஆலோசனைபெற வேண்டும்.
பின்னர், இரண்டு அறிக்கைகளையும் நீதி அமைச்சருக்குப் பரிந்துரைத்த பிறகு, பிரதிவாதிக்கு மன்னிப்பு வழங்க முடியுமா இல்லையா என்பதை பரிசீலிக்க முடியும், இது வழக்கமான நடைமுறையாகும். எனினும் அந்த நடைமுறைகள் எதனையும் பின்பற்றாமல் இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார். அமைச்சரின் பரிந்துரையோ, சட்டமா அதிபரின் ஆலோசனையோ, நீதிபதிகளின் அறிக்கையோ பெறப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது மற்றும் அந்த நடைமுறை தொடர்பான திகதிகள் மற்றும் ஆவணங்கள் குறித்து நீதிமன்றம் சிறப்பு கவனம் செலுத்தியது.