27.9 C
Jaffna
February 3, 2025
Pagetamil
உலகம்

அமேசன் காட்டில் 40 நாட்கள் சிக்கித்தவித்த 4 குழந்தைகள் மீட்பு!

கொலம்பியா நாட்டில் அமேசன் வனப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து தப்பித்த குழந்தைகள் நான்கு பேர் அடர்ந்த வனப்பகுதியில் தொலைந்துபோன நிலையில் 40 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர்.

குழந்தைகள் நான்கு பேரும் உயிருடன் மீட்கப்பட்டதை கொலம்பிய நாட்டு ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ உறுதி செய்துள்ளார். அமேசன் மழைக்காடுகளின் அடர்த்தியான பகுதிகளில் சிக்கிய அந்த நான்கு குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டதற்காக அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியும் அரசுக்கு நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக ஜனாதிபதி பெட்ரோ தனது ருவிட்டர் பக்கத்தில், “கொலம்பிய காடுகளில் கடந்த 40 நாட்களுக்கு முன்னர் மாயமான குழந்தைகள் 4 பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இது தேசத்திற்கான மகிழ்ச்சி செய்தி” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த மீட்புப் பணியில் ஈடுபட்ட பூர்வக்குடிகள் மற்றும் இராணுவத்தினரின் புகைப்படங்களையும் ஜனாதிபதி பெட்ரோ ருவிட்டரில் பகிர்ந்துள்ளார். மீட்கப்பட்ட 4 குழந்தைகளும் அந்தத் தருணத்தில் மிகவும் சோர்ந்துபோய், அச்சத்துடன் காணப்பட்டனர் என்று கூறிய ஜனாதிபதி, இருப்பினும் அந்த 4 குழந்தைகளும் மனிதர்கள் எத்தகைய நெருக்கடிகளுக்கு இடையேயும் வாழ முடியும் என்பதற்கான முன் உதாரணமாக, அடையாளமாக இருப்பார்கள். அவர்களின் கதை வரலாறாகும் எனத் தெரிவித்துள்ளார்.

13 வயதான லெஸ்லி ஜேகோபோம்பேர், 9 வயதான சோலோனி ஜேகோபோம்பேர் முகுடி, 4 வயதான.டியன் ரனோக் முகுடி, 12 மாத குழந்தையான கிறிஸ்டின் ரனோக் முகுடி ஆகியோரே மீட்கப்பட்டவர்கள்.

குழந்தைகள் ஹுய்டோட்டோ பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். மழைக்காடுகளில் எப்படி வாழ்வது என்பது குறித்து மூத்த சகோதரர்களுக்கு ஓரளவு அறிவு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தைகள் மீட்கப்பட்டதில் வில்சன் என்ற மோப்ப நாய்தான் முக்கிய பங்காற்றிருந்தது. சிறுவர்கள் தங்கிய தாவர குடிசையை கண்டறிந்து, அதன் பின் தொடர்ந்து மோப்பம் பிடித்து பின்தொடர்ந்து சென்றுள்ளது.

கடந்த மே 1 ஆம் திகதி ஒற்றை இன்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று ஆறு பயணிகள் மற்றும் ஒரு பைலட்டுடன் கொலம்பியாவிலிருந்து அமேசன் காட்டின் மேல் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதில் குழந்தைகளின் தாய் மேக்டலீனா முகுடி வேலன்சியா, பைலட் மற்றும் ஒரு பூர்வக்குடி இனத் தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அந்த விமானத்தின் பாகங்கள் கிடந்த பகுதியில் 3 சடலங்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் விமானத்தில் பயணித்திருந்த மற்ற 4 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.

அதனையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. விபத்து நடந்த பகுதியிலிருந்து வெகு தூரத்தில் குழந்தைகளின் ஆடைகள், பால் போத்தல், சாப்பிட்டு எஞ்சிய பழங்கள், தாவரங்களால் உருவாக்கப்பட்ட தங்குமிடம் போன்றவை கண்டனர். இதனால் குழந்தைகள் உயிருடன் இருக்க வாய்ப்பிருக்கலாம் என்று கருதி இராணுவம் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டது. அமேசன் காடுகள் மிகவும் அடர்ந்தவை என்பதால் பூர்வக்குடிகள் துணை இல்லாமல் அங்கே தேடுதல் வேட்டை சாத்தியப்படாது. அதனால், இராணுவம் பூர்வக்குடிகள் உதவியை நாடியது. அவர்களும் உதவிக்கரம் நீட்ட 40 நாட்களுக்குப் பின்னர் 4 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பணியில் ஏராளமான தன்னார்வலர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர். கொலம்பிய நாட்டு ஊடகங்கள் இதுதொடர்பான அன்றாடத் தகவல்களைப் பகிர்ந்துவர ஒட்டுமொத்த தேசமும் குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று ஆவலைத் தெரிவித்தன.

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை கொலம்பிய அரசு பகிர்ந்தது. பரிதாபமாக காட்சியளித்த அந்த 4 குழந்தைகளுடன் இராணுவ வீரர்கள், பூர்வக்குடிகள், தன்னார்வலர்கள் இருந்தனர். அமேசான் காட்டில் 40 நாட்கள் தாக்குப்பிடித்த குழந்தைகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

எதிர்காலத்தில் இந்தக் கதை ஒரு ஹாலிவுட் படமாகக்கூட மாறலாம் என்று இணையவாசிகள் குழந்தைகள் மீட்புப் படத்தின் கீழ் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சூடானில் 54 பேர் பலி

east tamil

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து

east tamil

டிக்டொக்கால் இறந்த மகள்

east tamil

அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்படவுள்ள இலங்கையர்கள்

east tamil

‘வில்லனை அடித்து ஹீரோவாக வேண்டுமா… என்னை அழைப்பீர்!’ – அடிவாங்கி சம்பாதிக்கும் மலேசிய இளைஞர்

Pagetamil

Leave a Comment