யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடில் காரணமாக கோயில் மகோற்சவம் தடைப்படுள்ளது. வழிபடுவதற்காக வந்த பொதுமக்கள், கோயிலில் காத்திருந்து விட்டு வீடு திரும்பினர்.
யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானம் 3 குடும்பங்களைச் சேர்ந்த பூசகர்களின் பராமரிப்பில் இருந்தது. எனினும், அவர்களிற்குள் நீண்டகாலமாக முரண்பாடு காணப்பட்டது. இவர்கள் மூவரும் தலா 10 நாட்கள் வீதம் திருவிழாவை நடத்தி வந்தனர். சுழற்சி முறையில் கோயில் கொடியேற்றத்தை ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், பூசகர் ஒருவர் அண்மையில் யாழ் மேல் நீதிமன்றத்தில் கோயில் உரிமை வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், இதுவரை உரிமையாளராக இருந்த பூசகர் ஒருவருக்கு உரித்தில்லையென குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் அவருக்கு சார்பாக தீர்ப்பு வந்ததாக குறிப்பிட்ட வழக்கு தொடர்ந்தவர், தனக்கு 20 நாட்கள் திருவிழாவும், மற்றொருவருக்கு 10 நாள் திருவிழா என்றும் திட்டமிட்டார்.
கோயில் உரிமையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டவரே இம்முறை கொடியேற்றத்தை ஆரம்பிக்க வேண்டியவர். அவர் நேற்று முன்தினம் யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சுழற்சிமுறையின்படி இம்முறை தான் கொடியேற்றத்தை செய்வதை யாரும் தடைசெய்யக்கூடாது என கேட்டிருந்தார். அவருக்கு சார்பாக மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இன்று கோயில் திருவிழா ஆரம்பிக்கவிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை நேற்று இரண்டு தரப்பும் ஏட்டிக்குப்போட்டியாக செய்தனர். இதனால் கோயிலில் பெரும் களேபரம் ஏற்பட்டது. இரு தரப்பும் தகராற்றில் ஈடுபட்டதையடுத்து, யாழ்ப்பாண பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து, கோயிலை பூட்டி திறப்பை எடுத்துக் கொண்டனர். இரு தரப்பையும் இன்று காலை 9 மணிக்கு நீதிமன்றம் வருமாறு அழைத்திருந்தனர்.
இரு தரப்பினரும் இன்று காலை நீதிமன்றம் சென்றனர். இதுவரை திரும்பி வரவில்லை.
இன்று (09) காலை 10 மணியளவில் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் பூசகர்களினுடைய முரண்பாடால் மகோற்சவம் தடைப்பட்டுள்ளது. நீதிமன்றில் இன்று வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவுள்ளது.
கோயில் கதவு மூடப்பட்டுள்ள நிலையில் வழிபடுவதற்காக வந்த பொதுமக்கள் காலைமுதல் ஆலயத்திற்கு வெளியில் காத்திருந்தனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்த நைவேத்திய பொருட்களை கோயில் வாசலில் வைத்து விட்டு, பூசகர்களை திட்டிக் கொண்டு வீடு சென்றனர்.
யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னான சங்கிலியன் போருக்கு செல்லும் போது, இந்த கோயிலிலேயே தனது போர் வாளை வைத்து வணங்கிவிட்டு செல்வது வழக்கம். சங்கிலிய மன்னனின் போர்வாள் கோயிலில் நீண்டகாலமாக வைக்கப்பட்டிருந்தத. பின்னர், விடுதலைப் புலிகள் தனது அருங்காட்சியகத்தில் வைப்பதற்கக அந்த போர்வாளை எடுத்துச் சென்றனர். தற்போது அது எங்கிருக்கிறது என தெரியவில்லை.