கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 2ஆம் நிலை வீராங்கனையான பெல்லாரசின் அரினா சபலெங்கா 6-4, 6-4 என்ற நேர் செட்டில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.
43ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா முச்சோவா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் 333ஆம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனஸ்டசியா பாவ்லி சென்கோவாவை தோற்கடித்து அரை இறுதியில் கால் பதித்தார்.
போருக்கு எதிர்
உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுக்கு எதிராக வெற்றி பெற்ற பின்னர் அரினா சபலெங்கா ஊடகங்களை சந்தித்தார். அப்போது, உக்ரைன் போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அரசியலில் நிபுணர் அல்ல” என்றார்.
“எனது நாடு எந்த மோதலிலும் இருப்பதை நான் விரும்பவில்லை; நான் போரை ஆதரிக்கவில்லை. அதாவது நான் இப்போது [பெலாரஸ் ஜனாதிபதி] அலெக்சாண்டர் லுகாஷென்கோவை ஆதரிக்கவில்லை.” என்றார்.
இந்த போட்டி முடிந்ததும், உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுடன் கைகுலுக்க அரினா சபலெங்கா வலைக்கு அருகில் சென்றார். எனினும், எலினா கைலுக்காமல் சென்று விட்டார். இதனால் எலினா ரசிகர்களின் கேலிக்கு ஆளானார்.
உக்ரைனிய வீரர்கள் பொதுவாக போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய போட்டியாளர்களுடன் கைகுலுக்க மறுக்கின்றனர்.




