நெல்லை, துலுக்கர்குளம் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமம், வடுகன்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல் (63) என்பவர் துலுக்கர்குளம் பஞ்சாயத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அவரின் மனைவி சீதாராமலெட்சுமி (58). இந்தத் தம்பதிக்கு ராமசாமி என்ற மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் சீதாராமலெட்சுமி கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சீதாராமலெட்சுமியின் மகன் ராமசாமிக்குத் திருமணமாகி விட்டது. அவருடைய மனைவி மகாலட்சுமி. ராமசாமி-மகாலட்சுமி தம்பதிக்கு இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். மூத்த மகனுக்கு ஐந்து வயதும், இளைய மகனுக்கு 10 மாதமும் ஆகிறது. திருமணமானதிலிருந்தே மகாலட்சுமிக்கும் அவருடைய மாமியாருக்குமிடையே சுமுகமான உறவு இருக்கவில்லை என அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாமியார்-மருமகளிடையே அடிக்கடி வாக்குவாதமும் சண்டையும் ஏற்பட்டு வந்திருக்கிறது. அதனால் ராமசாமி தனிக்குடித்தனம் போக ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், அவர்களைத் தனியாக அனுப்ப விரும்பாத சீதாராமலெட்சுமி, தனது வீட்டின் பின்பக்கத்தில் தனியாக வீடு கட்டிக் கொடுத்து அதில் மகனையும் மருமகளையும் தனிக்குடித்தனம் வைத்திருக்கிறார்.
அருகருகே மாமியார்-மருமகள் வசித்ததால் இருவருக்குமிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு இருந்துவந்திருக்கிறது. அதனால் ஆத்திரத்திலிருந்த மகாலட்சுமி, ஒருகட்டத்தில் தன்னுடைய மாமியாரைத் தீர்த்துக் கட்டினால் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும் என நினைத்திருக்கிறார். அதற்கான சரியான சந்தர்ப்பத்துக்காக அவர் காத்துக்கொண்டிருந்திருக்கிறார்.
அண்மையில் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் வெளியே சென்றுவிட்ட நிலையில், மாமியார் சீதாராமலெட்சுமி மட்டும் வீட்டில் படுத்திருப்பதைப் பார்த்த மருமகள் மகாலட்சுமி, தனக்கான சந்தர்ப்பம் கிடைத்ததாக நினைத்திருக்கிறார். அதனால் அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி மாமியாரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்திருக்கிறார்.
ஆனால், தான் கொலைசெய்தது தெரிந்துவிடக் கூடாது என நினைத்த அவர், கணவனின் பேன்ட் சட்டையை அணிந்திருக்கிறார். அத்துடன், இரு சக்கர வாகனத்தின் ஹெல்மெட்டை எடுத்து தலையில் அணிந்துகொண்டதுடன், கையில் இரும்புக்கம்பியுடன் மாமியார் படுத்திருந்த அறைக்குள் நுழைந்திருக்கிறார். ஆண் உடையுடன் நுழைந்த அவர், தூங்கிக்கொண்டிருந்த சீதாராமலெட்சுமியை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்.
இரும்புக்கம்பியால் விழுந்த அடிகளைத் தாங்க முடியாமல் மாமியார் கதறியதையும் பொருட்படுத்தாமல் கல்மனதுடன், தொடர்ந்து அடித்திருக்கிறார். அதில் மயங்கிய மாமியார் இறந்துவிட்டதாக மகாலட்சுமி நினைத்து, அங்கிருந்து சென்றிருக்கிறார். அந்தக் கொலையை மர்மநபர்கள் செய்ததுபோல ஜோடிக்க வேண்டும் என்பதற்காக, மாமியாரின் கழுத்தில் கிடந்த ஐந்தரை சவரன் நகையை அறுத்து எடுத்துச் சென்றிருக்கிறார்.
அதனால் நகைக்காக யாரோ மர்மநபர் கொலை செய்துவிட்டார் எனக் கூறினால், குடும்பத்தினர் நம்பிவிடுவார்கள் என அவர் எதிர்பார்த்திருக்கிறார். ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த சீதாராமலட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.
நகைக்காக இந்தக் கொலை நடந்திருக்கக் கூடும் என்கிற சந்தேகத்துடன் போலீஸார் விசாரணையைத் தொடங்கினார்கள். அப்போது வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பேன்ட், சட்டை, ஹெல்மெட் அணிந்த நபர், கையில் இரும்புக்கம்பியுடன் வீட்டுக்குள் நுழையும் காட்சி பதிவாகியிருந்தது. அறைக்குள் கம்பியால் சரமாரியாகத் தாக்கும் சத்தமும் சீதாராமலட்சுமியின் மரண அலறல் சத்தமும் அதில் கேட்டதால் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அந்தக் கிராமத்தில் இருந்த மேலும் பல சிசிடிவி பதிவுகளையும் ஆய்வுசெய்தனர். அப்போது, வெளியிலிருந்து பைக்கிலோ, நடந்தோ புதிய ஆட்கள் யாரும் ஊருக்குள் வரவில்லை என்பது தெரியவந்தது. அதனால் சீதாராமலட்சுமி வீட்டிலிருந்த வீடியோவை நன்றாக ஆய்வு செய்தபோது அதில் இருந்த உருவம், மகாலட்சுமியைப்போல இருந்தது. அதனால் அவரிடம் தீவிர விசாரணை செய்தபோது, மாமியாரை அடித்துக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக சீதபற்பநல்லூர் போலீஸ் ஆய்வாளர் ராதா வழக்கு பதிவுசெய்து, மகாலட்சுமியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தார். மகாலட்சுமி சிறையில் அடைக்கப்பட்டதால் அவரின் பாதுகாப்பிலிருந்த பத்து மாத கைக்குழந்தை அவருடைய தாயாரின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டது. மூத்த மகனை ராமசாமி தனது பாதுகாப்பில் வைத்திருக்கிறார்.