கடவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையமொன்றில் இருந்து 10,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றதாக கூறப்படும் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பில் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மசாஜ் நிலையத்தின் செயற்பாடுகள் தடையின்றி தொடர்வதற்கு கடவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு வழங்குவதற்காக மசாஜ் நிலைய முகாமையாளரிடம் பணம் கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மசாஜ் சென்டரின் முகாமையாளர் இதனை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.
முகாமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், ஆணைக்குழுவினர் கடவத்தை பகுதியில் சோதனை நடத்தி, முகாமையாளரிடம் இருந்து உரிய தொகையை லஞ்சமாக பெற்றதாக சந்தேகத்தின் பேரில் காரில் சென்ற முன்னாள் பொலிஸ் பரிசோதகரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சபுகஸ்கந்த பொலிஸில் கடமையாற்றும் போது கடமைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் சேவையை விட்டு விலகிய பொலிஸ் பரிசோதகர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முன்னாள் பொலிஸ் பரிசோதகரிடம் மேலதிக விசாரணைகளை ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.