பிரித்தானிய நடிகரும், புகழ்பெற்ற ஸ்டாண்ட்-அப் நேரடி நகைச்சுவையாளருமான ரிக்கி ஜேர்வைஸூக்கும் இலங்கையின் முன்னாள் அமைச்சர் நவின் திசாநாயக்கவுக்கும் இடையிலான ட்விட்டர் கருத்துப்பரிமாற்றத்தின் போது, நகைச்சுவையாளர் ரிக்கி ஜேர்வைஸ், தம்மை நியாயப்படுத்தியுள்ளார்.
பிரித்தானிய நடிகர் ரிக்கி ஜேர்வைஸ், தமது நகைச்சுவைகளின் போது, மதத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக இலங்கையின் முன்னாள் அமைச்சர் நவின் திசாநாயக்க தமது விமர்சன கருத்துக்களை ஆரம்பித்திருந்தார்.
ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை எந்தவொரு ஜனநாயகத்திலும் பேச்சு சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் மற்றவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தி அதை அனுபவிக்க முடியாது என்று நவின் திசாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
உங்களுக்கு வேடிக்கையானது இன்னொருவருக்கு வேடிக்கையாக இருக்காது. இது தனிப்பட்ட பிரச்சினை என்பதால் மதத்தை உரையாடலில் இருந்து விலக்கி வைப்பதே சிறந்தது என நவின் திஸாநாயக்க ட்வீட் மூலம் ரிக்கி ஜேர்வைஸூக்கு ஆலோசனையும் வழங்கியிருந்தார்.
எனினும் முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் ட்வீட்டால் தான் வருத்தமடைந்ததாகவும், அதை நீக்குமாறும் ஜேர்வைஸ் ட்வீட் மூலம் கேட்டுக்கொண்டார்.
உங்கள் ட்வீட் என்னை எவ்வளவு காயப்படுத்தியது என்பதை என்னால் சொல்ல முடியாது. நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.
தயவுசெய்து அதை நீக்கிவிட்டு உடனடியாக மன்னிப்பு கேட்க முடியுமா? என்று ஜேர்வைஸ், நவீன் திசாநாயக்கவுக்கு ட்வீட் செய்துள்ளார்.
அதற்கு பதிலளித்த நவீன் திஸாநாயக்க, அது தனது கருத்து சுதந்திரம் எனக் கூறி தமது ட்வீட்டை நீக்க மாட்டேன் என்று குறிப்பிட்டார்.
‘மன்னிக்கவும் நான் உங்களை காயப்படுத்தினேன். எனினும் எனது ட்வீட்டை நீக்கப் போவதில்லை, அது எனது கருத்து சுதந்திரம் நண்பரே’ என்று நவின் திஸாநாயக்க ட்வீட் செய்துள்ளார்.
இதனையடுத்து ரிக்கி ஜேர்வைஸ், ‘நான் கூற வந்ததையே நீங்களும் கூறியுள்ளீர்கள்’ என்ற அர்த்தத்தை தரும் வகையில், “Bingo!” என்று பதிலளித்தார்.
எனினும் இதன் பின்னர் நவீன் திசாநாயக்க எந்த ட்விட்டையும் செய்யவில்லை.