விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரியான லெப்டினன் கேணல் துவான் முத்தலிப் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர், பொரளையில் கொல்லப்பட்ட வர்த்தகரைச் சுட வந்த இருவருக்கு இராணுவ மேஜர் ஒருவரின் கெப் வண்டியில் போக்குவரத்து வழங்கப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அம்பலப்படுத்தியுள்ளது.
இதன்படி, பொலன்னறுவையில் வசிக்கும் அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ மேஜர் ஒருவரின் கெப் வண்டியொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், கொலைக்கு உதவியதாகக் கூறப்படும் நால்வரைக் கைது செய்துள்ளனர்.
இம்மாதம் 20ஆம் திகதி பொரளை லெஸ்லி ரணகல மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் களனியைச் சேர்ந்த ஐ.விதானாராச்சிலகே சஞ்சீவ (53) என்ற நபர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வர்த்தகர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைக்குப் பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வண்டியின் பதிவு எண் அடையாளம் காணப்பட்டு, பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டது
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இந்த கெப் வண்டியில் பொரளைக்கு அழைத்துவரப்பட்டு குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
“அதன் பின்னர், இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களும் பேஸ்லைன் வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் லெஸ்லி ரணகல மாவத்தைக்கு வந்துள்ளனர்” என்று சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பொலிசார் கூறுகின்றனர்.
விசாரணையின் போது, கெப் வண்டியின் உரிமையாளரான இராணுவ மேஜர், கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி மூன்று மாத காலத்திற்கு கொழும்பு 4 இல் உள்ள வாகன வாடகை நிறுவனம் ஒன்றிற்கு வாகனத்தை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் மாத்தறை வல்கம பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு வாடகை அடிப்படையில் குறித்த வண்டி வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் மருதானையில் முகவர் நிறுவனமொன்றை நடத்தும் வர்த்தகர் ஒருவரிடம் அந்த வண்டியை அடகு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வர்த்தகர் தனது தனிப்பட்ட பாவனைக்காக கெப் வண்டியை வைத்திருந்த போது, அவரிடம் கெப் வண்டியை அடகு வைத்த நபர் வந்து இராணுவ மேஜரிடம் கொடுப்பதாக கூறி கெசல்வத்தை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கியொன்றுக்கு அருகில் கொண்டு சென்றுள்ளார்.
பின்னர் 20ஆம் திகதி, கொலைக்குப் பிறகு, கடற்கரை வீதி பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு அருகில் வண்டி நிறுத்தி வைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன் பின்னர் கடந்த 22ஆம் திகதி கடவத்தை – ராகம வீதியில் கெப் வண்டியை எடுத்துச் சென்ற மற்றுமொரு சந்தேக நபர், பதிவு உரிமையாளரான இராணுவ மேஜருக்கு தொலைபேசியில் அறிவித்துள்ளார். பின்னர் அந்த வண்டியை அவரே எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.