ஏழரைக் கோடி ரூபா பெறுமதியான தங்கப் பொருட்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுடன் நேற்று (23) காலை டுபாயிலிருந்து இலங்கை வந்த புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
நேற்று (23) காலை 8.30 மணியளவில் டுபாயில் இருந்து விமானத்தில் இருந்து நாட்டிற்கு வந்த முஸ்லிம் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த உறுப்பினர், விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்தில் இருந்து வெளியில் வந்து சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சோதனைக்குட்படுத்தப்பட்டார்.
அவரது பயணப்பொதிகளை சோதனையிட்ட போது, அதில் ஒரு கிலோ எடையுள்ள தங்கக் கட்டியும், சுமார் 2 1/2 கிலோ எடையுள்ள நகைகளும் காணப்பட்டன.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 3 கிலோ 397 கிராம் எனவும், இதன் மதிப்பு 74 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பயணப் பையில் 91 ஸ்மார்ட் தையடக்கத் தொலைபேசிகளையும் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ. 4.2 மில்லியன் என சுங்கப் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.
சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கும் சுங்க வருமானக் கண்காணிப்புப் பிரிவினரால் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், எம்.பி. தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்தை பயன்படுத்தி இந்த பொருட்களை கொண்டு வர எம்பி முயன்றார், ஆனால் சுங்க அதிகாரிகளின் திடீர் சோதனையால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
இவ்வாறாக இலங்கைக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் பொருட்கள் மீதான சோதனையில் சந்தேகநபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதியை விட மூன்று மடங்கு அபராதம் அறவிடுவதே நடைமுறையாகும்.
எவ்வாறாயினும், இந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அதே முறை பின்பற்றப்படுகிறதா என்பதை சுங்க அதிகாரிகள் அவதானித்து வருவதாக உயர் சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த எம்.பி., நீண்டகாலமாக இதுபோன்ற கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா என சுங்கத்துறை விசாரித்து வருகிறது.
நாட்டின் சுங்கத்துறை வரலாற்றில் விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது திருட்டு இதுவாகும். 1978 ஆம் ஆண்டு, அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அநுர டேனியல் அவர்களும் இவ்வாறு தங்கத்தை கொண்டு வரும்போது சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அதன் காரணமாக அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய நேரிட்டது. .