கனடாவில் உள்ள முன்னணி பல்கலைக்கழகம் ஒன்றினால் வழங்கப்படும் கல்வி விசா வழங்குவதாக கூறி பலரிடம் ரூ.600 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த பெண்ணும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடியில் மருத்துவர்கள், பொறியியலாளர்கள், காவல்துறை அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் என ஏராளமானோர் சிக்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தாக்குதல் சம்பவம் பற்றிய முறைப்பாட்டினால் இந்த மோசடி அம்பலமானது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அருகில் பாதிக்கப்பட்ட ஒருவர் தாக்கியதாக சந்தேகத்திற்குரிய பெண் மற்றும் ஆணினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தம்பதியினருடன், அவர்களை தாக்கியதாக கூறப்படும் நபர் தலங்கம பொலிஸாருக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அவர்கள் மூவரிடமும் விசாரணை நடத்தியபோது இந்த பெரிய அளவிலான மோசடி பற்றிய தகவல் தெரியவந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
தம்பதியரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர், அவரது மகன் கனடாவில் உள்ள முன்னணி பல்கலைக்கழகத்தில் கற்பதற்கான விசாவை பெறுவதற்காக தம்பதியருக்கு ரூ.1.5 மில்லியன் கொடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தம்பதியினர் வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை என்றும், தன்னைத் தவிர்த்து வருவதாகவும், பின்னர் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவுக்கு இதே போன்ற குற்றங்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
மோசடி விசாரணைப் பணியகத்தின் விசேட குழுவொன்று தலங்கம பொலிஸாருக்குச் சென்றதுடன், தம்பதியினருக்கு எதிராக கிடைத்த ஆறு முறைப்பாடுகள் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவுக்கு விசா தருவதாக கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்டோரிடம் தலா ரூ.1.5 மில்லியன் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் கொழும்பு உலக வர்த்தக நிலையத்தின் ஆறாவது மாடியில் கனடாவில் உள்ள முன்னணி பல்கலைக்கழகம் ஒன்றிற்கு 15 மாத கற்கைநெறிக்கான கல்வி விசா வழங்கும் அலுவலகத்தை கூட்டாக நடத்தி வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் நுகேகொடை பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடையவர் மற்றும் பெண் சந்தேகநபர் 47 வயதான கடுவெல பிரதேசத்தை சேர்ந்தவர்.
இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.