ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று (மே 18) தீர்ப்பு வழங்கியுள்ளது.
5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய ஒருமித்த தீர்ப்பில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா அமைப்பு மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது,
“ஜல்லிக்கட்டு மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது. அதேபோல, காளைகளுக்கும் உடல்ரீதியாக கடுமையான தாக்கங்களை விளைவிக்கிறது. காளைகள் ஜல்லிக்கட்டில் ஓட விரும்புவது இல்லை, அவை கட்டாயப்படுத்தப்படுகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பு கடந்த 5 ஆண்டுகளாக கள ஆய்வு செய்து சேகரித்து கொடுத்துள்ள தரவுகள், ஆதாரங்கள், அறிக்கைகளை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஜல்லுக்கட்டு என்பது ஒரு கொடூரமான விளையாட்டு” என்று பீட்டா தனது வாதத்தை முன்வைத்தது.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம் என்றாலும் கூட விளையாட்டின்போது நேரும் துன்புறுத்தல்களைத் தவிர்க்க உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.