26.2 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இந்தியா

கர்நாடக முதல்வர் பதவி இழுபறி: ‘முதுகில் குத்தமாட்டேன்’; டெல்லி செல்லும் முன்பு டி.கே.சிவகுமார் பேட்டி

“பதவியை பெறுவதற்காக முதுகில் குத்தவோ, மிரட்டவோ மாட்டேன்” என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அவர் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் வெளியாக இரண்டு நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்று தீர்மானிப்பதில் காங்கிரஸ் கட்சியில் இழுபறி நிலவி வருகிறது. மாநிலத்தின் அடுத்த முதல்வர்யார் என்பதைத் தீர்மானிக்க நடந்த காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அந்த பொறுப்பு கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ஒப்படைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சித்தராமையா திங்கள்கிழமை தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்த நிலையில், தனது தரப்பினை எடுத்துக் கூறுவதற்காக டி.கே.சிவக்குமார் செவ்வாய்க்கிழமை டெல்லி புறப்பபட்டுச் சென்றார். முன்னதாக திங்கள்கிழமை மாலையே அவர் டெல்லி செல்வதாக இருந்தது. ஆனால், உடல்நிலை பாதிப்பு காரணமாக அந்தப் பயணத்தை அவர் ரத்து செய்திருந்தார்.

முதுகில் குத்தமாட்டேன்

டெல்லி பயணத்திற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.சிவகுமார் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் என்னைத் தனியாக டெல்லி வரும்படி அழைத்திருந்தார். அதன்படி நான் தனியாக டெல்லி செல்கிறேன். என்னுடைய உடல்நிலை இப்போது நன்றாக உள்ளது” என்றார்.

தொடர்ந்து முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “எங்களுடையது ஒற்றுமையான வீடு. இப்போது அதில் 135 உறுப்பினர்கள் இருக்கின்றோம். அவர்கள் என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யாரையும் தனியாக பிரிக்க நான் விரும்பவில்லை. பதவிக்காக நான் முதுகில் குத்தமாட்டேன், மிரட்டவும் மாட்டேன். எங்களுடைய அடுத்த இலக்கு மக்களவைத் தேர்தலில் அனைத்து இடங்களையும் வெல்வது தான். நான் ஒரு பொறுப்புள்ள மனிதன். தவறான வரலாறுக்கு நான் முன்னுதாரணமாக இருக்க நான் விரும்பவில்லை. நான் தவறான பிம்பத்துடன் செல்ல விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் வெற்றி

கர்நாடகாவில் மே 10-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 224 இடங்களில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜக 66, மஜத 19, சுயேச்சைகள் 4 இடங்களை பிடித்தன. இதற்கிடையில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல் இடையே போட்டி நிலவுகிறது. சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே வெளிப்படையாகவே போட்டி வெடித்துள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டது.

அன்று நள்ளிரவு 12 மணிக்கு டி.கே.சிவகுமார் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது சித்தராமையா, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட‌ காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவருக்கு கேக் ஊட்டி வாழ்த்தினர். அடுத்த முதல்வர் விவகாரத்தில் சுமுகமாக செயல்பட வேண்டும் என அவரிடம் கோரிக்கையும் விடுத்தனர். இந்நிலையில், டெல்லி சென்ற மல்லிகார்ஜுன கார்கே அங்கு மேலிடப் பார்வையாளர்களான சுஷில்குமார் ஷிண்டே, ஜிதேந்திரா சிங், தீபக் பாபரியா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால், கர்நாடக மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோருடனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

டெல்லி வர அழைப்பு: இதையடுத்து, டெல்லி வருமாறு சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு கார்கே அழைப்பு விடுத்தார். இதன்பேரில் சித்தராமையா திங்கள்கிழமை டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஜனநாயக முறைப்படி ரகசிய வாக்கெடுப்பு நடத்தி முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும். பெரும்பாலான எம்எல்ஏக்கள் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்” என்றார்.

டி.கே.சிவகுமார் திங்கள்கிழமை டெல்லி செல்லவில்லை. இதுதொடர்பாக அவர் கூறியபோது, ‘‘நான் காங்கிரஸ் மேலிடத்துக்கு விசுவாசமாக இருந்ததால் பல்வேறு இன்னலுக்கு ஆளானேன். மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறேன். எனக்கு என்ன வழங்க வேண்டும் என்பதை மேலிடம் முடிவெடுக்கட்டும். என் கையில் எதுவும் இல்லை. என்னுடைய பிறந்தநாள் என்பதால் கட்சி தொண்டர்களை சந்தித்து வருகிறேன். எனது வீட்டில் சிறப்பு பூஜையும் இருக்கிறது. எனக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லை. இன்று வயிற்று எரிச்சல் அதிகரித்திருக்கிறது. மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனால், மேலிடம் அழைத்தும் டெல்லி செல்லவில்லை’’ என்றார். இதனால் கார்கே நேற்று திட்டமிட்டபடி மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருடன் ஆலோசனை நடத்த முடியவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ – தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை

Pagetamil

மருதங்கேணி பொலிஸாரால் சற்றுமுன் இரண்டு பெண்கள் கைது: மேலும் இருவருக்கு அழைப்பு

east tamil

ஆசிரியரின் ஆபாச பேச்சால் தற்கொலைக்கு முயன்ற 10ம் வகுப்பு மாணவி

east tamil

மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த மாணவர்கள் கேரளாவில் கொடூரம்

east tamil

“விமான நிலையம் வேண்டாம் என்று கூறவில்லை, ஆனால்” – பரந்தூரில் விஜய் பேசியது என்ன?

Pagetamil

Leave a Comment