யாழ்ப்பாணம் நாவாந்துறையில் சிறுமியொருவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவரை, கடத்தல்காரன் என கூறி நையப்புடைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
அந்த பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது.
குறித்த நபர் காணாமல்போனமை தொடர்பாக ஏற்கனவே குடும்பத்தினரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கலை சிறுமியொருவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் என குறிப்பிட்டு, அவரை பிடித்து சிலர் விசாரித்துள்ளனர். அவர் இயல்பாக பதில் சொல்லாததால், அவர் நிச்சயம் கடத்தல்காரனாகவே இருப்பார் என நினைத்த ஆர்வக்கோளாறுள்ள சிலர், கடத்தல்கரனை நையப்புடைக்கிறோம் என நினைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
பின்னர்,யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
மக்களால் ஒப்படைக்கப்பட்ட நபரிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.
ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை கூட கண்டறிய முடியாமல், கும்பலாக சேர்ந்து தாக்கிய கொடூர சம்பவம் பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அந்த கும்பல் மீது சட்டநடவடிக்கையெடுக்க வேண்டுமென உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.