அந்த மக்கள் அனைவரும் மே-18 முள்ளிவாய்க்காலிலும் தாம் வாழும் இடங்களிலும் அணிதிரண்டு; முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நிறைவு செய்து தமிழர் தேச விடுதலையை அடைவோம் எனும் திடசங்கற்பத்தை நிலை நாட்டிக் கொள்வோம் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்-
இலங்கைக்கு 1948ல் சுதந்திரம் கிடைத்தது. அந்தச் சுதந்திரம் தமிழர் தேசத்திற்கு, தமிழர் தேச மக்களுக்குக் கிடைக்கவில்லை.
ஐரோப்பியரிடம் போரில் இழந்த சுதந்திரம் தமிழர் தேசத்திற்கும், தமிழ் மக்களுக்கும் திரும்பப் பெறும் உருத்து இலங்கையின் பூர்வீகக் குடிமக்களுக்கு ஆண்ட பரம்பரைக்குக் கிடைக்காத நிலையில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் தேச மக்கள் விடுதலைக்காக ஜனநாயக வழியிலும், ஆயுத வழியிலும் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
கடந்த 70 ஆண்டுகளிலும் பௌத்த சிங்கள ஆட்சியின் மேலாதிக்கம் தமிழர் தேசத்தையும், தமிழ் மக்களையும் பௌத்த சிங்கள மயமாக்கி வருவதும் தமிழர் தேசமும் தமிழ் மக்களும் இன அழிவுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதையும் உலகம் சர்வதேசம் நன்கு அறிந்துள்ளது.
இன்றுவரை பௌத்த சிங்கள மயமாக்கப்பட்ட தேசத்தில் தமிழர் போரினாலும், படையெடுப்புக்களினாலும், இனக் கலவரங்களினாலும் குறிப்பாக 2009 காலப்பகுதியில் மே-18 வரை அழிக்கப்பட்டு வரும் நிலையில் எஞ்சிய தமிழ் மக்கள் தங்கள் உயிர்களையும் எஞ்சிய தமிழர் தேசத்தையும் பாதுகாக்கவும் இழந்த சுதந்திரத்தை மீட்கவும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.
மே 18 நினைவேந்தல் நிகழ்ச்சி முள்ளிவாய்க்கால் முற்றத்திலும் உலகில் தமிழர் வாழும் பிரதேசங்களிலும் நடைபெற்று வுந்துள்ள நிலையில் இலங்கையிலும் நடைபெற மக்கள் அணிதிரளவுள்ளனர்.
தமிழர் பாரம்பரியத்தில் உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செய்வது நினைவு கூர்வது அவர்தம் பண்பாடாகும். உயர் நாகரிகமாகும் கடந்த பதினான்கு ஆண்டுகளாக இலங்கையில் முள்ளிவாய்க்கால் முற்றத்திலும், தமிழர் வாழ்விடங்களிலும் இந் நிகழ்வேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழர் பாரம்பரியத்தில் உயிர்களை பலிகொடுத்த, களப் பலியாகிய மக்கள் ஆத்மாக்கள் நினைவு கூரப்படுவதும் அந்த மக்களிடத்திலே வாழ்நாளில் இறப்பில்லாது வாழ்ந்து வருவதும் இதயங்களில் நிலைகொண்டுள்ள நம்பிக்கையாகும். அந்த ஆத்மாக்கள் வாழும் மக்களிடத்தில் அந்தரித்து நிற்கும் எனும் நம்பிக்கையுடன் தமிழர் கொள்கை இலட்சியத்தை நிலைநாட்டி நிற்கும் என்ற திடசங்கற்பம் தமிழர் தேச மக்களிடம் நிலைகொண்டுள்ளது.
அந்த மக்கள் அனைவரும் மே-18 முள்ளிவாய்க்காலிலும் தாம் வாழும் இடங்களிலும் அணிதிரண்டு; முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நிறைவு செய்து தமிழர் தேச விடுதலையை அடைவோம் எனும் திடசங்கற்பத்தை நிலை நாட்டிக் கொள்வோம் என வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.