12 நாட்களின் முன்னர் காணாமல் பேயிருந்த இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது காதலனே இந்த கொலையை செய்தது தெரிய வந்துள்ளது.
தொழிலை விஸ்தரிக்க கொடுத்த நகையை திருப்பிக் கேட்டதால் இளம் பெண் கொல்லப்பட்டுள்ளார்.
திருச்சூர், தும்பூர்முழி காட்டுக்குள் ஆதிரா என்ற இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. ஆதிரா திருமணமாகி 2 குழந்தைகளுடன் கணவனுடன் வசித்து வந்தவர்.
எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஆதிரா 12 நாட்களுக்கு முன் காணாமல் போனார். கணவர் இது குறித்து பொலிசாரிடம் முறையிட்டார்.
இது தொடர்பான விசாரணையை மேற்கொண்ட பொலிசார், சிசிரிவி கமராவை ஆய்வு செய்தனர்.
ஆதிரா வேலை செய்த பல்பொருள் அங்காடியிலிருந்து, காதலன் அகிலுடன் காரில் ஏறி ஆதிரா செல்வது அதில் பதிவாகியருந்தது.
இதனடிப்படையில் ஆதிராவின் காதலரான அகிலை கைது செய்தனர். அவர் கொலையை செய்ததை ஒப்புக்கொண்டார்.
ஆதிரா அங்கமாலியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்தார். இங்கு அகில் மீன் சப்ளை செய்து வந்தார். அவர்கள் இருவரும் ஆறு மாதங்களுக்கு மேல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.
இருவரும் இன்ஸ்டகிராம் வழியாகவே பேசத் தொடங்கி, அதன் வழியாகவே காதலை வளர்த்தனர்.
ஒரு கட்டத்தில் தனது காதலியிடமிருந்து 12 சவரன் நகையை கடனாக கேட்ட அகில், தொழில் விஸ்தரிக்கப்பட்டதும் அதை திருப்பித் தருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அகிலிடம் இருந்து தங்கத்தை திரும்ப கேட்க ஆதிரா முடிவு செய்யும் வரை இருவருக்கும் இடையே சுமூகமாக உறவு தொடர்ந்தது.
ஆதிரா தங்க நகையை திரும் தருமாறு நச்சரிக்க தொடங்க, அவரை கொல்ல அகில் முடிவு செய்துள்ளார்.
அகில், ஆதிராவை ஏப்ரல் 29ஆம் திகதி விடுப்பு எடுக்கச் சொன்னார். அன்றைய தினம் மொபைல் போனை வைத்துவிட்டு வருமாறும் கேட்டுக் கொண்டார். வீட்டில் யாருக்கும் சொல்லாமல் வருமாறும், மாலைக்குள் வீடு திரும்பி விடலாம் என்றும் தெரிவித்தார். இருவரும் அதிரப்பள்ளிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.
இருவரும் காரில் அங்கு சென்றுவிட்டு திரும்பி வரும் போது, அகில் காரை தும்பூர்முழியின் அடர்ந்த காட்டுக்குள் செலுத்தினார். காரில் இருந்து இறங்கிய அகில், ஆதிராவின் கழுத்தை சல்வாரினால் நெரித்தார். மயக்கமடைந்து நிலத்தில் விழுந்த ஆதிராவின் கழுத்தில் சப்பாத்து காலால் பலமாக அடித்து, வாய் மற்றும் மூக்கை கையால் இறுக மூடினார். ஆதிரா இறந்ததும், உடலை பாறைகள் அருகே இழுத்துச் சென்று, காய்ந்த இலைகளால் மூடினார்.
ஆதிரா பிகாம் பட்டதாரி. அவரது தாயார் பல ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவரது சித்தியும் சமீபத்தில் புற்றுநோயால் இறந்தார். ஆதிராவின் சகோதரர் தற்போது சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சிறையில் உள்ளார். அவர் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்,
அகில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவர் இன்ஸ்டாகிராமில் அக்கியேட்டன் என்ற பெயரில் ரீல் செய்து வந்தார். அவருக்கு 10k பின்தொடர்பவர்கள் உள்ளனர்.




