புனே அரசு விஞ்ஞானியிடம் ஆசையாகப் பேசி, பாதுகாப்பு ரகசியங்களை பாகிஸ்தான் பெண் ஒருவர் வாங்கியிருக்கிறார்.
புனேயிலுள்ள இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தவர் பிரதீப் குருல்கர். புனே பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மையத்திலிருந்து ரகசியத் தகவல்கள் கசிவதாக டெல்லியிலுள்ள பாதுகாப்புத்துறைக்குத் தகவல் கிடைத்தது. உடனே இது குறித்து விசாரிக்கும்படி புனே பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மையத்துக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பிரதீப் குருல்கர் என்ற விஞ்ஞானி அடிக்கடி பெண் ஒருவருடன் வாட்ஸ்அப் காலில் பேசிக்கொண்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவருடன் பணியாற்றும் சக விஞ்ஞானி உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். அதனடிப்படையில், இது குறித்து தீவிரவாத தடுப்புப்படையினர் விசாரித்து வந்தனர். பிரதீப்பின் லேப்டாப், மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை தடயவியல் ஆய்வுத்துறையினர் சோதித்து பார்த்தபோது, ஏவுகணைகள் படங்களை பாகிஸ்தான் உளவுத்துறை பெண் ஏஜென்ட்டுடன் பகிர்ந்திருப்பது தெரியவந்தது. உடனே அவரைத் தீவிரவாதத் தடுப்புப்படையினர் கைதுசெய்தனர்.
சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரதீப்பை, 8ஆம் தேதி வரை போலீஸ் காவலில்வைத்து விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது. பாகிஸ்தான் உளவுத்துறையால் நியமிக்கப்பட்ட பெண், பிரதீப்பைத் தொடர்புகொண்டு ஆசையாகப் பேசி, தனது வலையில் விழவைத்திருக்கிறார்.
அடிக்கடி வாட்ஸ்அப் கால் மூலம் பிரதீப்புடன் பேசி, பாதுகாப்புத்துறை தொடர்பான ரகசியத் தகவல்களைப் பெற்று வந்திருக்கிறார்.
இந்த விஞ்ஞானி கடந்த 30 ஆண்டுகளாகப் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். அவர் ஏவுகணைகள் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகித்திருப்பதோடு, மத்திய அரசின் உயரிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
விஞ்ஞானி கைதுசெய்யப்பட்டிருப்பதை டெல்லியிலுள்ள பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மைய செய்தித் தொடர்பாளர் கவுசிக் உறுதிபடுத்தியிருக்கிறார். விஞ்ஞானி தனது தனிப்பட்ட சில புகைப்படங்களை அந்தப் பெண்ணுக்கு அனுப்பியிருக்கிறார். அந்தப் பெண், அந்தப் புகைப்படங்களை வைத்துக்கொண்டு பிரதீப்பை மிரட்டிப் பாதுகாப்புத்துறை ரகசியங்களைப் பெற்று வந்திருக்கிறார்.




