இளம் யுவதியொருவரின் 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஆயுள்காப்புறுதி பணத்தை பெறுவதற்காக, நண்பருக்கு 20 இலட்சம் ரூபா தருவதாக குறி்ப்பிட்டு, காதலியை வாகனத்தால் மோதி கொலை செய்வித்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிட்டிகல மானமிபிட்ட, தல்கஸ்வல நியாகம பிரதேச சபைக்கு அருகில் நின்றிருந்த யுவதியொருவர், கடந்த மாதம் 30ஆம் திகதி சிறிய ரக லொறி மோதி உயிரிழந்திருந்தார்.
விபத்தில், பிட்டிகல தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த நிரோஷா உதயங்கனி என்ற 32 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த நபரை நேற்றிரவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
இந்தக் கொலை சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மறுநாள் மாபலகம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் பெண்ணை லொறியால் மோதி கொலை செய்த குறித்த வாகன சாரதி தப்பியோடி தலைமறைவாகி விட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்த காதலி, 50 இலட்சம் ரூபா பெறுமதியான 4 ஆயுள் காப்புறுதிகள் செய்திருந்ததாகவும், அந்த பணத்தை எடுப்பதற்காக இந்த கொலையை திட்டமிட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தனது உற்ற நண்பனிடம் கொலையை செய்யுமாறு கேட்ட காதலன், அதற்காக 20 இலட்சம் ரூபா தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பெண்ணின் காதலன் கைதாகியுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவத்தைத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் இன்று (04) எல்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கொலையை செய்த 24 வயதான வாகன சாரதி தலைமறைவாகி விட்டார்.
சம்பவம் தொடர்பில் பிட்டிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




