இனப்பிரச்சினை தீர்வு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் அடுத்த வாரத்தில் 3 நாட்கள் தொடர் பேச்சு நடக்கவுள்ளது.
அடுத்த வாரம் 11, 12, 13ஆம் திகதிகளில் இந்த பேச்சு வார்த்தை நடத்தப்படவுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து பேச்சுக்கான அழைப்பு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
3 நாட்களும் மாலையில் பேச்சு நடக்கவுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழ் நாளை அல்லது மறுநாள் அனைத்து நாடளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தன.
11ஆம் திகதி பொதுப்பிரச்சினை தொடர்பாகவும், 12ஆம் திகதி அதிகார பகிர்வு தொடர்பாகவும், 13ஆம் திகதி அபிவிருத்தி தொடர்பாகவும் பேசப்படவுள்ளது.
முதல் இரண்டு நாட்களும் மாலை 5 மணிக்கும், இறுதிநாள் மாலை 4.30 மணிக்கும் சந்திப்பு நடக்கவுள்ளது.
இதேவேளை, தமிழ் தரப்புடனான சந்திப்புக்கு முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தனியாக சந்திக்க வேண்டுமென தமிழ் அரசு கட்சி தரப்பில், ஜனாதிபதி தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறாயினும், தமிழ் தேசிய கூட்டமைப்பு நடைமுறையில் இல்லையென்பதை ஏற்கெனவே ஜனாதிபதி நன்கறிந்துள்ளதால், இலங்கை தமிழ் அரசு கட்சி சந்திக்க விரும்புகிறதா அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பா என தமிழ் அரசு கட்சியிடமும், ரெலோ, புளொட் கட்சிகளுடனும் பேசி அறிய ஜனாதிபதி தரப்பு தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.




