உத்தர பிரதேசம் லக்னோவில் உள்ள சுஷாந்த் கோல்ஃப் நகர் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையர்கள் கடந்த 4ஆம் தேதி உடைத்து ரூ.39.58 லட்சத்தை திருடிச் சென்றனர்.
ஏடிஎம் இயந்திரம் அருகில் உள்ள வீட்டில் இருந்த சிசிடிவியில் கொள்ளையர்கள் வந்து சென்ற நீல நிற கார் படம் சிக்கியது. அதன் உரிமையாளர் பிஹாரைச் சேர்ந்த சீதாமர் கி. அவரிடம் நடத்திய விசாரணையில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின.
3 மாத பயிற்சி
இது குறித்து கோல்ஃப் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சைலேந்திர கிரி கூறியதாவது. ஏடிஎம் கொள்ளை கும்பலில் இடம் பெற்ற நீரஜ் என்பவரிடம் விசாரித்தோம். அவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் நுட்பத்தை பிஹாரின் சப்ரா பகுதியைச் சேர்ந்த சுதிர் மிஸ்ராவிடம் கற்றுக் கொண்டதாக கூறினார். பல மாநிலங்களைச் சேர்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு, ஏடிஎம் இயந்திரத்தை உடைப்பது குறித்து 3 மாத பயிற்சியை சுதிர்மிஸ்ரா அளித்துள்ளார். இதனால் அவர் ‘ஏடிஎம் பாபா’ என அழைக்கப்பட்டுள்ளார்.
ஏடிஎம் அறையின் கண்ணாடிகளில் பனி படர்ந்தது போன்ற திரவத்தை அடிப்பது, அதன்பின் ஏடிஎம் இயந்திரத்தை 15 நிமிடத்துக்குள் உடைத்து பணத்தை எடுப்பது குறித்து அவர் நேரடி பயிற்சி அளித்துள்ளார். பயிற்சிக்குப்பின் 15 நாட்கள் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியை 15 நிமிடங்கள் மற்றும் அதற்கு முன்பாக முடிப்பவர்கள் மட்டுமே, ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடிப்பதற்கு களம் இறக்கப்படுகின்றனர். ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் கும்பலுக்கு பயிற்சி அளித்த ‘ஏடிஎம் பாபா’ சுதிர் மிஸ்ராவை விரைவில் கைது செய்யவுள்ளோம். இவ்வாறு சைலேந்திர கிரி கூறினார்.
இந்த கும்பலால் இந்தியா முழுவதும் 30 இற்கும் அதிகமான ஏரிஎம் இயந்திரங்கள் உடைக்கப்பட்டுள்ளன.