வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் வழிபாட்டுக்கும், பூசைகளிற்கும் எந்தவொரு அரச அதிகாரிகளும் தடைவிதிக்க முடியாது என வவுனியா மாவட்ட நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.
எனினும், உடைக்கப்பட்ட ஆலய விக்கிரகங்களை இப்பொழுது வைக்க முடியாது, அடுத்த தவணையில் அதைப்பற்றி ஆராயலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய சிலை உடைப்பு தொடர்பில் இன்று நடந்த வழக்கு விசாரணையில் இந்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆலய நிர்வாகம் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகினார்.
தொல்லியத் திணைக்களம், வனவளத்திணைக்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இன்று வழக்கில் முன்னிலையாகாததால், அவர்கள் அடுத்த வழக்கில் முன்னிலையாகும் வரை, ஆலயத்துக்கு வாகனங்களில் செல்வதை தவிர்க்குமாறு பொலிசார் கேட்டுக் கொண்டனர்.
ஆலய நிர்வாகம் அதை ஏற்றுக்கொண்டது.
தொல்லியல் திணைக்களத்தினர் இன்று மன்றில் முன்னிலையாகியிருக்காததால், உடைக்கப்பட்ட சிலையை மீள வைப்பது தொடர்பில் மன்று உத்தரவு பிறப்பிக்கவில்லை.
அடுத்த தவணையில் தொல்லியல்துறையின் கருத்தையும் அறிந்து, பொருத்தமான உத்தரவை பிறப்பிப்பதாக மன்று கட்டளையிட்டது.
வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-வவுனியா நிருபர் ரூபன்-