மாவை சேனாதிராசா… தமிழ்அரசு கட்சி புதிய தலைமை… ஐபிசி பாஸ்கரன்: இளைஞர்களிற்கு வழிவிடக்கோரும் கோமாளி அரசியல்!

Date:

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமை மாற்றம் விரைவில்- சில மாதங்களில் நடக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் அரசு கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராசா மீண்டுமொரு முறை தலைமை பதவிக்கு போட்டியிடுவதில்லை என்ற முடிவில் தற்போதுள்ளார் என தமிழ்பக்கம் அறிகிறது.

தலைமை மாற்றத்தை சுமுகமாக நிகழ்த்தி- கட்சியை உடைவின்றி தொடர்ந்து பயணிக்க வைக்கும் தீவிர முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

தமிழ் அரசியல் ஒரு காலத்தில் “சீரியஸ்“ ஆக இருந்தது. அரசியலில் ஈடுபடுபவர்கள் குறைந்த பட்சமாவது “சீரியஸாக“ இருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது அப்படியல்ல. யுத்தத்தின் பின்னராக தமிழ் தேசிய அரசியலின் சீரழிவுக்கு பிரதான காரணங்களில் ஒன்றாக இதுவும் இருந்தது.

தமிழ் அரசியலை “சீரியஸ்“ இல்லாமல் செய்ததில் முக்கியமானவர் என்ற குற்றச்சாட்டு எம்.ஏ.சுமந்திரன் மீது உள்ளது. தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியலில் இருந்து சுமந்திரன் யாரையெல்லாம் அகற்றினார், யாரையெல்லாம் புகுத்தினார் என்ற பட்டியலை தயாரித்தீர்களெனில், இந்த “சீரியஸ் அரசியல்“ என்னவென்பதை புரிந்து கொள்வீர்கள்.

பொதுவாகவே தமிழர்கள் ரிஸ்க் எடுக்க தயாரில்லாதவர்கள். யுத்தத்தின் பின்னரான அரசியல், தறுக்கணித்து திரிந்த இளையவர்கள் பலருக்கும் அரசியல்வாதி அந்தஸ்த்தை ஏற்படுத்த உதவியது. எதையும் செய்ய தயாரில்லாத- ஆனால், ஏதாவது பதவியில் இருக்க ஆசைப்பட்ட இளையவர்களிற்கு இந்த காலத்தில் நல்லதொரு கோசமும் அகப்பட்டது. அந்த கோசம்- இளையவர்களிற்கு வழி விடுங்கள்.

எந்த நாட்டு அரசியலுக்கும் இந்த கோசம் பொருத்தமற்றது.

இந்த கோசத்தை முன்வைக்கும் இளையவர்கள், மாவை சேனாதிராசாவை ஒரு பல்கலைக்கழகமாக கருதி, அவரது வாழ்க்கையையும், போராட்ட வரலாற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

பாடசாலைக்காலத்தில் இருந்து தீவிர அரசியல் செயற்பாட்டாளராக மாறி, நில அபகரிப்புக்கு எதிரான போராட்டங்கள், சிங்கள குடியேற்றங்களை தடுக்க தமிழ் குடியேற்றங்களை உருவாக்கும் களப்பணி, தமிழ் அரசு கட்சியின் சாத்வீக அரசியல் போராட்டங்களிற்கு சமாந்தரமாக- தீவிர எண்ணமுடைய இளையவர்களுடனும் தலைமறைவு வாழ்க்கையென தமிழ் தேசிய அரசியலின் இரண்டு வரலாற்று பாதைகளிலும் பயணித்தவர். சாத்வீக அரசியல் பாரம்பரியத்திலிருந்து வந்தவர்களில், அந்தவகையானவர்கள் மிகச்சிலரே.

அதனால்தான், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்து ஆயுத இயக்கங்கங்களும் அவருடன் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடித்தார்கள்.

ஆனால், ஆயுதப் போராட்டத்தின் பின்னரான- தமிழ் தேசிய அரசியலின் மோசமான காலகட்டத்தில் அவர் மீது சொந்தக்கட்சியின் ஒரு பகுதினராலேயே விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அந்த விமர்சனங்கள் அவரது அரசியல் அர்ப்பணிப்பின் மீதானவை அல்ல. தமிழ் அரசு கட்சியின் வரலாற்றில் என்றுமில்லாத விதமாக, கட்சிக்குள் பெருகிய- அரசியலை “சீரியஸாக“ எடுத்துக் கொள்ளாத கூட்டத்தின் குழப்பங்களில் உடனடியாக தலையிடவில்லை, அந்த குழப்பங்களில் விலக்குப் பிடிக்கவில்லையென்ற குற்றச்சாட்டை வைத்து, அவர் சோம்பேறி என ஒரு அப்பிராயத்தை உருவாக்க முனைந்தனர்.

கிட்டத்தட்ட அரைச்சகாப்தமாக தமிழ் தேசிய அரசியலில் நீடித்த அவரை- இந்த காலகட்டத்தில் சிறை, தலைமறைவு, காட்டு வாழ்க்கை, நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் என்ற அனுபவங்களை கொண்டவரை- 2009 இற்கு பின்னர் வயதுக்கு வந்த இளைஞர்கள் விரல் நீட்டி குற்றம்சாட்ட ஆரம்பித்தனர்.

மாவை சேனாதிராசா புனிதமானவர், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்ற பிம்பத்தை நாம் உருவாக்கவில்லை. இன்றுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியில் ஆக மூத்த போராட்ட பாரம்பரியமுடைய ஒரே நபர் அவர்தான் என்பதையே சொல்கிறோம். போராட்டம் எந்த வழியில் இருந்தாலும், அது அஞ்சலோட்டத்தை போல தொடர்ச்சியை கொண்டிருந்தாலே, பட்டறிவை வளப்படுத்தி, அந்த அமைப்பு வெற்றியடையும். அல்லது, குறைந்த பட்சம், முன்னர் அடைந்த தோல்விகளை மீண்டும் மீண்டும் அடையாது.

2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை கிட்டத்தட்ட ஒரு வாழும் கடவுளுக்கு நிகராக சுமந்திரன் நம்பிச் செயற்பட்டார். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அவர் நம்பிக்கை கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்க, தமிழ் தரப்பில் மிகப்பெரும்பாலானவர்கள் அவரது ஆணுகுமுறையை பிழையானது என விமர்சித்தனர். அந்த சமயங்களில் ஒன்றில் சுமந்திரன் ஒரு பேட்டியொன்றில், இத்தனை வருடங்களாக எத்தனை முயற்சிகளை செய்து தோற்று விட்டோம், எனக்கு ஒரு சந்தர்ப்பம் தரக் கூடாதா என்ற சாரப்பட கேட்டிருந்தார்.

அரசியலில்ல இப்படி தோற்றுத் தோற்று விளையாட முடியாது.

தமிழ் தரப்பு ஒரு அரசியல் இயக்கமாக- தொடர்ச்சியாக- செயற்பட்டிருந்தால்- 2009 இன் பின் தமிழ் தேசிய அரசியலில் இத்தனை பிளவுகள் வந்திருக்காது. கட்சிகளிற்குள் திடீர் திடீரென தறுக்கணித்துக் கொண்டு யாரும் தனித்து மேலேழுந்து, நானும் தோற்று தோற்று விளையாடப் போகிறேன் என தனித்து செயற்பட முடியாது.

இன்றைய இளைஞர்கள் வட்டார தேர்தல் பார்வையை தவிர்த்து, மாவை சேனாதிராசா போன்ற போராட்ட பாரம்பரியமிக்கவர்களின் தொடர்ச்சியாக அரசியலை வளப்படுத்தினாலே, தமிழ் தேசிய அரசியல் உயிர்வாழும் என்பதை குறிப்பிடவே, மாவையின் போராட்ட பரிமாணங்களை சுட்டிக்காட்டினோம்.

தனியே மாவை சேனாதிராசா என்றல்ல, இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் அவரை விட அனுபவத்தில் இளைமையான நிறைய மூத்தவர்கள் உள்ளனர். வேறு பரிமாணங்களை கொண்ட சீ.வீ.கே.சிவஞானம் போன்றவர்களும் உள்ளனர். தமிழ் அரசு கட்சிக்கு வெளியில் ஏனைய கட்சிகளிலும் ஏராளம் தலைவர்கள் உள்ளனர்.

இளைஞர்களிற்கு வழிவிடுங்கள் என கூச்சலிடும் அரசியலை மேற்கொண்டால், மூத்தவர்களை புறக்கணித்து ஓதுக்கிவிட்டு, தறுக்கணித்துக் கொண்டு பதவிகளை மட்டும் குறிவைத்து செயற்பட்டால், கட்சிகளாக பிரிந்து, தோற்றுத் தோற்று விளையாடிக் கொண்டிருக்கவே வேண்டும்.

வரலாற்றின் தொடர்ச்சியாக செயற்படாமல், வரலாற்றை ஆவணப்படுத்தாமல், பட்டறிவுகளை கடத்தும் பொறிமுறையை கண்டடையாதது தமிழர்களிக் பலவீனம். உலகின் மிக மூத்த குடி போன்ற தற்பெருமைகளை எமக்குள்ளேயே பேசிக் கொள்வோமே தவிர, ஆயிரத்திற்கும் சற்று மூப்பான வரலாற்றுடைய சிங்களவர்களை விட மூத்த வரலாறுடையவர்கள் என்பதற்கான எந்த வரலாற்று ஆவணமும் நம்மிடமில்லை.

தென்னிந்தியாவிற்குரிய பல நாய் இனங்கள் இன்றுமுள்ளன. சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி போல, நமது மண்ணுக்குரிய ஒரு நாய் இனமும் நம்மிடமில்லை. சில ஆண்டுகள் பழமையான மட்டுவில் கத்தரி போன்ற காய்கறி இனங்களே அருகி விட்டன. விரைவான விளைச்சல், பணம் தரும் என்பதற்கான அதையெல்லாம் அழிய விட்ட, கலப்பின மரக்கறிக்கு மாறிவிட்டோம். இன்னும் ஒரு பத்து வருடங்களில் பாரம்பரிய காய்கறி இனங்களே நம்மிடம் இருக்காது.

இந்தவகையான இயல்புடைய ஒரு சமூகம், அரசியலில் மாத்திரம் விதிவிலக்காக இருக்குமென எதிர்பார்க்க முடியாது. அங்கும் தறுக்கணித்துக் கொண்டுதான் செயற்படுவார்கள். வரலாற்று தொடர்ச்சியை பேண மாட்டார்கள். இலங்கை தமிழ் அரசு கட்சியில் கடந்த 10 ஆண்டுகளிற்கும் மேலாக அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

இதனால்தான் ஐபிசி பாஸ்கரன் போன்றவர்கள் எல்லாம் வெளிநாட்டில் உழைத்து, குடும்பத்தை செட்டில் ஆக்கி விட்டு, இளைஞர்களிற்கு வழிவிடுங்கள்.. அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்ற அரசியல் கோமாளித்தனங்கள் எல்லாம் நடக்கிறது.

இந்த சூழலில், இலங்கை தமிழ் அரசு கட்சி புதிய தலைமை மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. இம்முறை தலைமை பதவிக்கு சாத்தியமுள்ள 3 பேருமே 2010ஆம் ஆண்டின் பின்னர் அரசியலுக்கு வந்தவர்கள். நீண்ட வரலாறுடைய இலங்கை தமிழ் அரசு கட்சி, முதல்முறையாக அரசியல் அனுபவம் குறைந்த ஒரு தலைவரை சந்திக்கவுள்ளது.

அனுபவங்களை தொடராததே மிகப்பெரிய பலவீனமாக உள்ள இனத்தின், மிகப்பெரிய கட்சிக்கு, அனுபவம் குறைந்தவர்கள் கட்சி தலைமைக்கு வரவுள்ளனர். குறைந்த அனுபவமுடையவர்கள் பலர் அரசியலில் வெற்றியடைந்துள்ளனர்தான். அதனால் அனுபவ குறைவை பிரதான கவலையாக கொள்ளத் தேவையில்லை. ஆனால், வரும் தலைவர் வரலாற்றிலிருந்து பாடம் கற்றவரா என்பதே முக்கியமானது.

தமிழ் அரசு கட்சியின் யாப்பு விதிகளின்படி 2 வருடங்களிற்கு ஒரு முறை கட்சி மாநாடு கூடி, நிர்வாக தெரிவு இடம்பெற வேண்டும். அப்படி நடந்தால், அடுத்த மாநாடு, 2025 இல் நடக்க வேண்டும். அந்த மாநாடு நடந்தால், அனேகமாக மட்டுவில் கத்தரி இனத்துடன், தமிழ் தேசிய உணர்வும் இல்லாமல் போய் விட்டதா அல்லது தப்பிப் பிழைத்ததா என்பது தெரிய வந்து விடும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழ் தேசிய கட்சிகளின் சந்திப்பில் சூம் வழியாக கலந்து கொண்ட தமிழ் தேசிய பேரவைக்கு எதிர்ப்பு!

தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்...

மின்னல் தாக்கி யுவதி பலி

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல்...

வழக்கு பொருட்களிலிருந்து ரூ.500 திருடிய பொலிஸ்காரர் கைது!

பொரல்ல பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பொருட்களிலிருந்து ரூ. 500 திருடப்பட்டது தொடர்பாக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்