யாழில் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டும், இராணுவத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டும் வரும் அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அருண் சித்தார்த் என்ற நபரும், அவரது மனைவியும், மனைவியின் சகோதரியும் நேற்று (22) கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் வெற்றிவேல் ஜெயந்திரனை தாக்கி, அவரது ஹொட்டேலிற்குள் அத்துமீறி நுழைந்து அட்டூழியம் புரிந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் அவர்கள் கைதாகினர்.

கைதாகியுள்ள அருண் சித்தார்த்தின் மனைவியின் தங்கையும், 65 வயதான வெற்றிவேல் ஜெயந்திரனும் சட்டபூர்வமற்ற கணவன், மனைவியாக வாழ்ந்தவர்கள். அவர்களிற்கு பிள்ளையொன்றும் உள்ளது.
வெற்றிவேல் ஜெயந்திரன் அவரை பிரிந்த பின் வேறொரு உறவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னைய சட்டபூர்வமற்ற மனைவிக்கு அவர் சில கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களையும், பணத்தையும் வழங்கிய பின்னரே பிரிந்ததாக கூறப்படுகிறது.
எனினும், இரு தரப்பிற்குமிடையில் சில காலமாக நீடித்து வரும் மோதல் போக்கு அண்மைய நாட்களாக அதிகரித்து, பேஸ்புக்கிலும் மோதல் நடந்தது. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் அருண் சித்தார்த் கும்பலால் ஜெயந்திரன் தாக்கப்பட்டார்.
அருண் சித்தார்த், மனைவி, மனைவியின் தங்கை உள்ளிட்ட ஒரு கும்பல் காரில் வந்து, ஹொட்டலுக்குள் அத்துமிறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டது. அத்துடன் வெற்றிவேலி ஜெயந்திரன் மீது சாணிக்கரைசலையும் ஊற்றி புகைப்படம், வீடியோ எடுத்தது. ஜெயந்திரன் மீது சாணி ஊற்றி புகைப்படம் எடுக்க வேண்டுமென திட்டமிட்டு, சாணிக் கரைசல் எடுத்து வந்துள்ளது.

அருண் சித்தார்த், மனைவி, மனைவியின் தங்கை நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த தாக்குதல் கும்பலில் அங்கம் வகித்த மேலும் 3 உறவினர்கள் இன்று விசாரணைக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், ஆறு பேரும் யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
இன்று கைதானவர்களில் இளம் பெண்ணொருவர் கைக்குழந்தையுடன் இருந்தார். அவரை பிணையில் விடுவித்த நீதிபதி, ஏனைய 5 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 5 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படுவார்கள்.



