யேமனின் தலைநகரில் நன்கொடை பெறுவதற்காக ஏராளம் மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது 90 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று ஹவுதி அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரமலான் மாதத்தின் இறுதி நாட்களை குறிக்கும் வகையில் வணிகர்களினால் வழங்கப்பட்ட நன்கொடைகளைப் பெறுவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் சனாவில் உள்ள ஒரு பாடசாலையில் புதன்கிழமை குழுமிய போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்களான அப்தெல்-ரஹ்மான் அகமது மற்றும் யஹியா மொஹ்சென் ஆகியோர் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவிக்கையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்துtதற்காக ஹவுதி போராளிகள் வானத்தை நோக்கிச் சுட்டதாகவும், மின்மார்க்க கம்பியை தோட்டாக்கள் தாக்கியதாகவும், அது வெடித்து மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.
ஒவ்வொருவருக்கும் 9 டொலர் பெறுமதியான உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
At least 90 persons died in #stampede early this morning at charity event in school in #Sanaa in #Yemen where they had gathered to receive up to $9 per person, days before #Ramadan ends & #EidAlFitr2023 arrives. #MIG #EidUlFitr #Ramadan pic.twitter.com/O1z5qPUhWO
— Siraj Noorani (@sirajnoorani) April 20, 2023
மக்கள் சிதறி ஓட முற்பட்ட போது நெரிசலில் சிக்கி பலர் இறந்தனர்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில் ஏராளமான உடல்கள் தரையில் இருப்பதையும், சில அசைவற்று இருப்பதையும், பலர் உதவிகோருவதையும் காண முடிந்தது.
ஏராளமானவர்கள் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இந்த சம்பவத்தை “சோகமானது” என்று விவரித்தார்.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த இரு வணிகர்களை கைது செய்துள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அந்நாட்டு அரசை அகற்றியதில் இருந்து சனா ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
Shocking images of the stampede that killed 78 people in #Sanaa #Yemen pic.twitter.com/OrfFNP0AUy
— Sami AL-ANSI سـامي العنسي (@SamiALANSI) April 20, 2023
உலகின் மிக மோசமான மனிதாபிமான பேரழிவுகளில் ஒன்றை உருவாக்கிய மோதலில் போராளிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட 150,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
யேமனில் உள்ள 21 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அல்லது நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு உதவியும் பாதுகாப்பும் தேவை என்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.