ஆங்கிலத்தில் பேசத் தெரியாததால் தொலைக்காட்சி நியூஸ் சேனல் ஒன்றில் தன்னை கரண் ஜோஹர் அசிங்கப்படுத்தியதாக நடிகை கங்கனா ரனாவத் குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ரா தான் பாலிவுட்டில் ஓரங்கட்டப்பட்டேன் என கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு ஆதரவாக பேசியிருந்த நடிகை கங்கனா ரனாவத், “தன்னைத் தானே செதுக்கிய ஒரு நடிகையை இந்தியாவை விட்டு விரட்டிவிட்டார்கள். கரண் ஜோஹர்தான் அவருக்கு தடை விதித்தார் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று கூறியிருந்தது கூடுதல் சர்ச்சையானது.
இதனிடையே கடந்த 2016ஆம் ஆண்டு திரைப்பட விழா ஒன்றில் பேசிய தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோஹர், “நான் அனுஷ்கா ஷர்மாவின் கரியரை முற்றிலும் முடக்க விரும்பினேன். ஆதித்யா சோப்ரா எனக்கு அனுஷ்கா ஷர்மாவின் புகைப்படத்தை படத்தைக் காட்டியபோது, நான் ‘இல்லை இவர் சரிவரமாட்டார். ஒப்பந்தம் செய்ய வேண்டாம்’ அவருக்கு பதிலாக மற்றொரு நடிகை ஒப்பந்தம் செய்ய கோரினேன்” என கிண்டலாக பேச, அவர் பக்கத்திலிருக்கும் அனுஷ்கா ஷர்மா சிரிக்கிறார். இந்தப் பழைய வீடியோ இணையத்தில் வைரலானது.
இதையடுத்து தன் மீதான தொடர் தாக்குதலுக்கு மறைமுகமாக பதிலளிக்கும் வகையில் கரண் ஜோஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் எதற்கும் பின்வாங்க கூடியவன் இல்லை. குறிப்பாக, பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து பேச தேவையில்லை” என இந்தியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கரண் ஜோஹரின் ஸ்கீரின்ஷாட்டை பகிர்ந்து, “ஒரு காலத்தில் நெப்போடிச மாஃபியாவைச் சேர்ந்தவர் எனக்கு ஆங்கிலம் சரிவர பேச தெரியாததால் தேசிய தொலைக்காட்சி நியூஸ் சேனலில் அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தினார். இன்று உங்கள் பதிவை பார்த்தபோது இந்தியில் நீங்கள் மேம்பட்டிருப்பது தெரிகிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.