புதையல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட தங்க நாணயங்கள் எனக் கூறி அம்பாறையில் உள்ள நபரொருவருக்கு விற்பனை செய்ய 389 தங்க முலாம் பூசப்பட்ட இரும்புத் துண்டுகளை எடுத்துச் சென்ற இரண்டு பெண்கள் உட்பட நால்வர் புதன்கிழமை (5) கந்தளாய் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு சந்தேக நபர்களும் பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.இவர்களில் இராணுவத்தை விட்டு வெளியேறிய ஒருவரும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நபர் மீது இதுபோன்ற மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மற்றைய நபர் மாணிக்கக் கற்கள் போன்று வர்ணம் பூசப்பட்ட ‘சூகிரி’ துண்டுகளை விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரு பெண்களும் சகோதரிகள் எனவும் ஒருவர் சந்தேக நபரின் மனைவி எனவும் பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறையில் வசிக்கும் ஒருவருக்கு 200,000 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக இந்த போலி தங்க நாணயங்கள் கொண்டு செல்லப்படுவதாக சந்தேக நபர்கள் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர். 200,000 ரூபாய்க்கு மட்டுமே இந்த நாணயங்களை விற்பதற்காக இந்த நபர்கள் எடுத்துச் செல்வதாக கூறுவது நம்பத்தகுந்ததல்ல என்றும், மேலும் பெரிய தொகைக்கு அவர்களை ஏமாற்றத் தயாராகி வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொலன்னறுவையில் இருந்து அம்பாறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நான்கு சந்தேக நபர்களையும் ஹபரணை – கந்தளாய் வீதியில் வைத்து பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மொறவெவ பொலிஸ் பிரிவின் சார்ஜன்ட் ஒருவருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் நால்வரும் கந்தளாய் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.