திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கடலூர் மற்றும் அதனை அண்டிய விஜிதபுர ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த தமிழ், சிங்கள மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 6 மீனவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.
மோதலை சமாளிப்பதற்கு காவல்துறை இராணுவத்தை அழைக்க வேண்டியிருந்தது.
அந்த பகுதி மீனவ மக்கள் வாழும் பகுதி. தமிழ் மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். அயல் கிராமத்தை சேர்ந்த சிங்கள மீனவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுருக்கு வலையை பயன்படுத்த வேண்டாமென கூறியுள்ளனர்.
சுருக்கு வலையை பயன்படுத்துவதால் சிறிய மீன்களும் பிடிபட்டு, மீனினம் அழிவடையும் அபாயமுள்ளது.
இந்த விவகாரத்தில் இரு தரப்புக்கிடையிலும் வாய்த்தர்க்கம் முற்றி, கரையோரத்தில் மோதலாக மாறியது.
இருதரப்பும் கற்கள், கொட்டான்களால் தாக்கிக் கொண்டனர்.
இரண்டு தரப்பிலும் தலா 3 பேர் வீதம் 6 பேர் திருக்கோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெமடைந்துள்ளன.
மேலதிக பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த திருகோணமலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன பிரம்மனகே, இரு கிராமங்களின் பிரமுகர்களை அழைத்து சம்பவத்தை சமரசம் செய்ய நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.