ஆடம் மில்னே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்த, டிம் சீஃபர்ட் 43 பந்துகளில் 79 ரன்கள் விளாச… இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கையை ஊதித்தள்ளியது நியூசிலாந்து.
டுனெடினில் நடந்த 2வது ரி20 போட்டியில் 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய நியூசிலாந்து 1-1 என தொடரை சமன் செய்தது.
வழக்கம் போலவே, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை நன்றாகத்தான் ஆரம்பித்தது. 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் என்ற நிலையில் இருந்த இலங்கை, 19 ஓவர்களில் 141 ரன்களுக்கு சகல விட்கெட்டுக்களையும் இழந்தது.
குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா ஆட்டமிழந்ததுடன், இலங்கை சீட்டுக்கட்டு போல சரிந்தது. ஒரு கட்டத்தில் இலங்கை 180 ரன்களுக்கு மேல் எடுக்கும் போல தோன்றியது.
பெரேராவும் டி சில்வாவும் துடுப்பெடுத்தாடும்போது இலங்கை மற்றொரு கணிசமான ஸ்கோரை எட்டியது. அவர்கள் 46 பந்துகளில் 62 ரன்களை பார்ட்னஷிப் அமைத்தனர்.
பெரேரா 32 பந்தில் 35 ரன்களில் வீழ்ந்தார். டி சில்வாவும் அடுத்த ஓவரில் வெளியேறினார், ரச்சின் ரவீந்திரரை லோங் ஓஃபில் பிடி கொடுத்து 26 பந்தில் 37 ரன்களில் வீழ்ந்தார்.
இதை தொடர்ந்து இலங்கை சரிவை கண்டது. ஷானக 7 ரன்களுடன் ஹென்றி ஷிப்லியின் பந்தை பௌண்டரி எல்லையில் பிடி கொடுத்து வீழ்ந்தார். அசலங்க 19 பந்தில் 24 ரன்களை எடுத்த நிலையில், மில்னேவின் கட்டரை டாப்-எட்ஜ் செய்து சௌதியிடம் பிடிகொடுத்தார்.
12வது ஓவரில் இலங்கை 3வது விக்கெட்டை இழந்தது. அந்த ஓவரிலிருந்து 50 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.
19வது ஓவரின் 2வது பந்தில் மில்னேவின் பந்துவீச்சில் அசலங்க ஆட்டமிழந்தார். 4வது பந்து ஒரு பயங்கர யோர்க்கர். பிரமோத் மதுஷனின் மட்டைக்கு தெரியாமல் உள்நுழைந்து ஸ்டம்பை பெயர்த்தது. 6வது பந்தும் யோர்க்கர். டில்ஷான் மதுஷங்கவின் மிடில் மற்றும் ஓஃப் ஸ்டம்பை பெயர்த்தது. 19 ஓவர்களில் 141 ரன்களுக்கு இலங்கையின் இன்னிங்ஸ் முடிந்தது.
மில்னே4 ஓவர்களில் 26 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள். பென் லிஸ்டர் 26 ரன்களுக்கு 2 விக்கெட் வீழ்த்தினார்.
142 என்ற ஸ்கோரை நியூசிலாந்து தொந்தரவில்லாமல் அடைந்தது.
தொடக்க வீரர் போவ்ஸ் 15 பந்தில் 7 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்ததார். மறுமுனையில் ரிம் சீஃபர்ட் காட்டடி அடித்தார்.
சீஃபர்ட் தொடர்ந்து சிக்ஸர்களை விளாசினார். சீஃபர்ட் மொத்தம் 6 சிக்ஸர்களையும், மூன்று பவுண்டரிகளையும் அடித்தார். 43 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 79 ரன்களை விளாசினார்.
டாம் லாதம் 30 பந்தில் 20 ரன்கள் எடுத்தார். இருவரும் 68 பந்துகளில் 106 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
நியூசிலாந்து 14.4 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமிழந்து வெற்றியிலக்கை அடைந்தது.




