Pagetamil
முக்கியச் செய்திகள்

‘தமிழ் அரசு கட்சியே பரவாயில்லை’: குத்துவிளக்கிற்குள்ளும் குழப்பங்கள் ஆரம்பம்; பலர் அதிருப்தியில் வெளியேற முடிவு!

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் குழப்பங்கள் ஆரம்பித்துள்ளன. கட்சிக்கட்டமைப்பு மற்றும் செயற்பாட்டு பலவீனம் தொடர்பாக உள்ளக ரீதியாக விமர்சனங்களும், சிறிய உரசல்களும் ஆரம்பித்துள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து இலங்கை தமிழ் அரசு கட்சி வெளியேறியதை தொடர்ந்து, ஏனைய தமிழ் தேசிய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு, புதிய உத்வேகத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பயணிக்கவுள்ளதாக அந்த கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் பத்திரிகை அறிக்கைகளிலும், செய்தியாளர் சந்திப்புக்களிலும் தெரிவித்தனர்.

எனினும், அது எதுவும் நடக்கவில்லை.

இது தொடர்பில் கூட்டமைப்பிலுள்ள கட்சியொன்றின் இரண்டாம் நிலை தலைவர் ஒருவர் தமிழ் பக்கத்திடம் தெரிவிக்கையில், “தமிழ் அரசு கட்சி வெளியேறிய போது, பல கட்சிகளை இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தியதாக அறிவித்தோம். அப்போது எமக்குள் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது. இதெல்லாம் நடந்து சில மாதங்கள் கடந்து விட்ட போதும், கட்டமைப்பு ரீதியாகவோ செயற்பாட்டு ரீதியாகவோ எமது அணி ஒரு சென்ரிமீற்றர் கூட முன்னகரவில்லையென்பது தெரிகிறது.

நாம் எமது கட்சி தலைமையிடமும் இது பற்றி பேசினோம். ஏனைய கட்சிகளின் தலைவர்களிடமும் பேசினோம். அனைவருமே “கட்டாயம் செய்வோம்“ என்கிறார்களே தவிர, எதையும் செய்யவில்லை.

எமது தலைவர்கள் அனைவரும் ஒன்றாக சந்திப்பதை கூட மிகப்பெரிய விடயமாக கருதுகிறார்கள். சந்திப்பிற்கு வருவதை கூட, மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து செயற்படுவதை போல உணர்கிறார்கள். கூட்டமைப்பாக செயற்படுவதென தீர்மானித்து 3 மாதமாகியும், கட்டமைப்பு உருவாக்கம் பற்றி எமது தலைவர்கள் இன்னும் பேசவில்லை. அப்படியொரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தால், ஒருவர் கொழும்பில் நிற்கிறார். ஒருவர் யாழ்ப்பாணத்தில் நிற்கிறார். மற்றொருவர் ஆதரவாளரின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு செல்ல வேண்டுமென்கிறார். அதனால் தலைவர்கள் சந்திப்பு நடப்பதே எமது கூட்டமைப்பில் மிகப்பெரிய அரசியல் சாதனையாக கருதும் போக்கு வந்து விட்டது“ என விசனத்துடன் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தமக்கு தெரியவில்லை என, அந்த கட்சிகளின் இரண்டாம் நிலை தலைவர்கள் பலர் தமிழ் பக்கத்திடம் விசனம் தெரிவித்தனர்.

“தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் எவற்றிடமும் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமான கட்டமைப்பு கிடையாது. அனைத்து கட்சிகளுமே சில பிரதேசசபைகளில் ஆதிக்கம் செலுத்தும் விதமாக- பிரதேசசபை கட்சிகளாகவே உள்ளன. குறைந்த பட்சம் இலங்கை தமிழ் அரசு கட்சியிடம் உள்ளதை போன்ற, கட்டமைப்பும்- ஜனநாயக ரீதியான முடிவெடுக்கும் வலையமைப்பும் இந்த கட்சிகளிடம் கிடையாது. கட்சி கட்டமைப்பை கிராம மட்டங்கள் தோறும் ஏற்படுத்தினாலே அந்த நிலைமையை ஏற்படுத்தலாம். எமது தலைவர்கள் அவர்களுக்கு நெருங்கிய ஓரிருவருடன் யாழ்ப்பாணத்திலிருந்து சில முடிவுகளை எடுக்கிறார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதே தெரியவில்லை“ என அந்த பிரமுகர் அதிருப்தியுடன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட தமிழ் தேசிய கூட்டமைப்பிலும் ஏராளமான புதிய உறுப்பினர்கள் இணைந்தனர். எனினும், தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், அவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் கட்சியுடன் தொடர்பில் இல்லை. அவர்களை தொடர்பு கொள்ள கட்சிகளிடம் எந்த பொறிமுறையும் இல்லை. அவர்களை கட்சி தலைமைகள் சந்திக்கவுமில்லை.

இது தொடர்பில் கட்சிகளில் புதிதாக இணைந்த வேட்பாளர்கள் பெருமளவில் அதிருப்தியடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே வேட்பாளர்கள் பலர் தமிழ்பக்கத்துடன் இது தொடர்பில் பேசி வருகிறார்கள்.

இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகி தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளூராட்சிசபை வேட்பாளராக இணைந்த சிலர், தாம் எடுத்த முடிவு தவறு என உணர்வதாக தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

“இலங்கை தமிழ் அரசு கட்சியில், எம்.ஏ.சுமந்திரனில் தவறுகள் இருக்கலாம். அவற்றை நாம் பெரிதாக பார்த்தோம். அரசியல் ரீதியாக பிழையான முடிவுகள் எடுக்கும் இடங்களில் இருக்கக்கூடாது என்பதால் கூட்டமைப்பில் இணைந்தோம். என்றாலும், அது தவறான அரசியல் முடிவு என இப்பொழுது உணர்கிறோம்.

அரசியல்ரீதியாக சரியான முடிவெடுக்கிறோமா, பிழையான முடிவெடுக்கிறோமா என்பதற்கு அப்பால், அரசியல் கட்சி உயிர்ப்புடன் இருக்க வேண்டும். செயற்பட வேண்டும். ஆனால் கூட்டமைப்பில் அது இல்லை. இப்பொழுது சடலம் மாதிரி இருக்கிறது. உயிர்ப்புடன் உள்ள கட்சி பிழையான முடிவெடுத்தால், நாம் போராடி சரியான முடிவெடுக்க வைக்கலாம். அந்த வகையில் இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகளை கட்சிக்குள்ளேயே போராடி சரி செய்வதே, தமிழ் மக்களின் நலன் சார்ந்த அடிப்படையில் சரியான முடிவாக இருக்கும் என இப்பொழுது உணர்கிறோம். நாம் தமிழ் அரசு கட்சியில் மீள இணைவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளோம்“ என அவர்கள் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தனர்.

இந்த நிலைமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள தலைவர்கள், இரண்டாம், மூன்றாம் நிலை தலைவர்களிடம் தமிழ் பக்கம் பேசியது. அனைவருமே ஒரேவிதமான- ரெம்ளேட் பதிலையே கூறினர்.

“ஓம். நிச்சயமாக நாம் இதை செய்ய வேண்டும். நாம் தயாராக இருக்கிறோம். முயற்சி செய்கிறோம். மற்றவர்கள்தான் பேசாமல் இருக்கிறார்கள். அவர்களுடன் விரைவில் பேசி செயற்டுவோம்“ என்றனர்.

கட்சிகளுடன் பேசியதிலிருந்து, 5 கட்சிகளுமே ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையீனத்துடனும், தலைமையை கைப்பற்றி விடுவார்களோ என்ற எச்சரிக்கையுடன் இருப்பதையும் தமிழ்பக்கம் புரிந்தது.

இதுதவிர, மீண்டும் தமிழ் அரசு கட்சி தம்மை இணைத்துக் கொள்ளும் என ரெலோவும், புளொட்டும் உள்ளூர நம்பிக்கையுடன் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏனைய 3 கட்சிகளிடமும் உள்ளன.

அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. இதன்போது, கூட்டமைப்பை கட்டமைப்பாக்குவது பற்றிய விவாதம் நடந்தது. கூட்டமைப்பு அரசியல் ரீதியாக செயற்பட வேண்டிய உடனடி தேவையுள்ள போது, அதை விட்டுவிட்டு கூட்டமைப்பை கட்டமைப்பாக்குவது பற்றிய சிக்கலான விடயங்களில் பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறது.

ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சிகள் பரந்துபட்ட கட்டமைப்பு இல்லாத நிலையில், கூட்டமைப்பு என்ற பொதுக்கட்டமைப்பை உருவாக்கி, தமது முதுகில் சவாரி செய்ய எத்தனிக்கிறார்கள் என்ற சந்தேகம் மற்றைய இரண்டு கட்சிகளிடமும் உள்ளது.

5 கட்சிகளும் தனித்தனியாக தமது கட்சிக்கட்டமைப்பை உருவாக்கி, தலைமைகள் இணைந்து செயற்படுவதே சாத்தியமானது என்ற ஆலோசனை பரவலாக முன்வைக்கப்பட்டுள்ள போதும், அதை உருவாக்கும் வல்லமை இல்லாததாலோ என்னவோ, 5 கட்சிகளும் அதை செய்யாமல், 5 கட்சிகளும் இணைந்து கூட்டமைப்பாக பிரதேசரீதியான கட்டமைப்பை உருவாக்குவோம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரதேசரீதியாக கட்சிகள் தனியாக கட்டமைப்பை உருவாக்குவதா அல்லது கூட்டமைப்பாக உருவாக்குவதா என்பது பற்றியும் இதுவரை கூட்டமைப்பிடம் தெளிவான நிலைப்பாடு இல்லை.

இது பற்றி 5 கட்சிகளிடமும் தமிழ் பக்கம் வினவிய போது, தனியாக செயற்பட்டு கட்சி கட்டமைப்பை உருவாக்க நாம் தயார், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியவில்லையென ரெம்ளேட் பதிலையே தெரிவித்தனர். இந்த விடயத்தில் கூட அவர்கள் கலந்துரையாடவில்லையென்பது தெரியவருகிறது.

கூட்டமைப்பாக, பிரதேசரீதியான கட்டமைப்பை உருவாக்குவது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு சாத்தியமில்லை. 5 சமனான பலமிக்க கட்சிகள் இருந்தால் அப்படி செய்யலாம்.

யாழ் மாநகரசபைக்கான வேட்பாளர் தெரிவில் நடந்த கூத்தை தமிழ் பக்கம் ஏற்கெனவே வெளியிட்டிருந்தது. தமது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட வேட்பாளர்களை தந்தே தீர வேண்டுமென சட்டத்தரணியொருவர் விடாப்பிடியாக நின்று, தன்னிடம் வழக்கிற்கு வந்தவர்களையும் வேட்பாளர்களாக இணைத்ததை குறிப்பிட்டிருந்தோம்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசசபைக்கான வேட்பாளர் நியமன பொறுப்பை ஏற்றிருந்த ஜனநாயக போராளிகள் கட்சியினரால், 15 வேட்பாளர்களை கூட கண்டுபிடிக்க முடியாமல் போய், வேட்புமனுவே சமர்ப்பிக்க முடியாமல் போனது.

எல்லா கட்சிகளிலும் வேட்பாளர் தட்டுப்பாடு நிலவிய போதும், வடக்கு கிழக்கில் பரவலாக வேட்புமனு தாக்கல் செய்த கட்சிகளில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலேயே ஒப்பீட்டளவில் அதிக டம்பி வேட்பாளர்கள் இணைக்கப்பட்டனர்.

யாழ் மாநகரசபை வேட்பாளர் நியமனத்தின் போது, வேட்பாளர் பதிவு நடக்குமிடத்திற்கு, ஒருவரை கையை பிடித்து அழைத்து வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியொன்றின் தலைவர், “தம்பி இவரையும் வேட்பாளராக போடுங்கள். இவர்தான் எமது கட்சியின் 3வது பிரமுகர்“ என்றார். அவர் யாரெனில், தலைவரின் வாகன சாரதி. இதுதான் அந்த கட்சியின் நிலைமை.

இப்படியான பலவீனமான பின்னணியில், தமிழ் தேசிய கூட்டமைப்பாக பிரதேச ரீதியாக கட்டமைப்பை நிறுவ முயன்றால், அது யாழ் மாநகரசபை வேட்புமனுவை போலத்தான் முடியும்.

என்றாலும், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி என்பன கூட்டமைப்பாக கட்டமைப்பை நிறுவ வலியுறுத்துகின்றன.

ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் 5 அங்கத்தவர்களை கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட்டு, செயலாளர் ஒருவர் தலைமையில் இயங்கும் கூட்டமைப்பு கட்டமைப்பு ஒன்றை சுரேஷ் பிரேமச்சந்திரன் தயாரித்து வழங்கியுள்ளார்.

அன்றைய கூட்டத்தில் மேற்படி விவகாரங்களை உடனடியாக முடிக்கும் படி சிறிகாந்தா வலியுறுத்தியதடன், அடிப்ப “இல்லையென்றால் எங்களை விடுங்கோ“ என கூறியபடி இருந்தார். தமக்காக வெளியில் பல “பிளாட்போர்ம்“கள் காத்திருப்பதாகவும் கூறினார்.

இது பற்றி தமிழ் பக்கத்திடம் பேசிய ஒரு கூட்டமைப்பு பிரமுகர், “நாம் பழைய கொம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டங்களிற்கு செல்லும் உணர்வு ஏற்பட ஆரம்பித்துள்ளது. சித்தாந்த ரீதியாக பேசிக் களைப்போம். ஆனால் செயற்பாட்டு ரீதியாக எதுவும் செய்ய மாட்டோம். தேவையற்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்தி, தேவையான விடயங்களை செய்யாமல் விடுகிறோம்“ என்றார்.

வெடுக்குநாறி மலை விவகாரத்திலும், பல கட்சிகள் பேசி பல தீர்மானங்கள் அறிவிக்கப்பட்ட பின்னரே, மிக தாமதமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு பொது கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது. இதில் போராட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டு, குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

தாமதமான நடவடிக்கையாவது கூட்டமைப்பின் சோம்பேறித்தனத்தை போக்குமா என்பதை பார்க்கலாம்!

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

Leave a Comment