கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட பொரு மூனா என்ற பாதாள உலக குற்றவாளி ரவிந்து வர்ண ரங்கன தலைமறைவாக இருக்க சட்டத்தரணி ஒருவரின் உதவி கிடைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த குற்றவாளி சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் அவிசாவளை நீதிமன்றில் சரணடைய வந்த போது பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை அவர் நீதிமன்றில் சரணடைய முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவிசாவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பொரு மூன மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பில் வைக்கப்பட்டு அவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் ஹங்வெல்ல தசவெல்ல பிரதேசத்தில் 662 கிராம் சி.4 ரக அதிசக்தி வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். டுபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பல் லலித் கன்னங்கர தான் இந்த வெடிபொருட்களை பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்ததாகவும், வெடிபொருட்களை வெடிகுண்டுகளாக பயன்படுத்தி இரண்டு வீடுகளை தாக்குவதற்கு தான் தயாராகி வந்ததாகவும் பொரு மூனவிடம் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்னர் இந்த வெடிமருந்துகளை வேறு ஒருவருடன் எடுத்துச் சென்றதாகவும், பொலிஸாரிடம் மாட்டிக் கொள்வேன் என்ற பயத்தில் தான் வெடிபொருட்களை புதைத்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொரு மூனா கைது செய்யப்பட்டதன் பின்னர் விசாரணைகள் இடம்பெற்றுவரும் வேளையில் இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 72 மணிநேர தடுப்புக் காலம் நேற்றுடன் (19) முடிவடையவிருந்தது. தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, வெடிபொருட்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொரு மூனாவை தடுத்து வைக்க வேண்டியிருக்கும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்றைய (19) நிலவரப்படி, இதுவரை 6 கொலைகளை தாம் செய்ததாக பொரு மூனா ஒப்புக்கொண்டார். ஜூலை 31, 2022 அன்று ரத்கமவில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிச் சூடு, அதே ஆண்டு ஒக்டோபர் 31 அன்று காலி மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு, ஊரகஸ்மன்ஹந்தியவில், ஹங்வெல்ல முஸ்லிம் ஹோட்டல் உரிமையாளர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகஹ சந்தியில் அமைந்துள்ள வர்த்தக ஸ்தலத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவங்களை அவர் ஒப்புக்கொண்ட கொலைகள் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த ஆறு கொலைகளும் ஐந்து துப்பாக்கிச் சூட்டில் நடந்துள்ளன. ரத்கம மற்றும் ஹிக்கடுவையில் நடந்த கொலைகள் ரத்கம விதுர வழங்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
பொடி லஸ்ஸியின் கும்பல் தனது குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்த ஆரம்பித்ததால் தான் கடற்படையில் இருந்த போது பாதாள உலகில் இணைந்ததாக பொலிஸாரின் விசாரணைகளின் போது பொரு மூனா தெரிவித்திருந்தார். பொடி லஸ்ஸியின் போட்டிக் கும்பல் ரத்கம விதுரவின் கும்பல் என்பதால் தான் ரத்கம விதுரவின் கும்பலுடன் இணைந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
விசாரணையின் போது, தனது பாடசாலை நாட்களில் தனது நண்பர்கள் தன்னைப் போறு மூனா என்று கேலி செய்ததாகவும், தன்னை அதிகம் கேலி செய்த ஒரு மாணவனை பாடசாலயின் மாடி கட்டிடத்தின் மேல் தளத்திற்கு அழைத்துச் சென்று அடித்ததாகவும், அவரது கால்களை பிடித்து தலைகீழாக தொங்கவிட்டு மிரட்டியதாகவும் பொரு மூனா கூறியுள்ளார்.
ரத்கம விதுர வழங்கிய ஒப்பந்தத்தின் பிரகாரம் தெற்கில் பல கொலைகளை செய்த போதிலும், லலித் கன்னங்கர வழங்கிய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஹங்வெல்ல துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும் பொரு மூனா விசாரணையின் போது தெரிவித்திருந்தார். ரத்கம விதுரவினால் லலித் கன்னங்கரவுக்கு அறிமுகம் செய்யப்பட்டதாகவும், தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
லலித் கன்னங்கர தன்னை டுபாய்க்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்ததால் தான் ஹங்வெல்ல கொலையில் ஈடுபட்டதாகவும், கொலைக்கு முன்னர் தனக்கான வெளிநாட்டு கடவுச்சீட்டை வேறு ஒருவரின் பெயரில் தயார் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
விசாரணையின் போது, தன்னை சுட்டுக் கொல்ல வேண்டாம் எனக் கோரி, பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் அவர் அழுது கொண்டிருந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னிலங்கையில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக காலிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப் பிரிவுக்கு வந்த போது அவர் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கால்களை கட்டிப்பிடித்து? “சேர் என்னை கொலைசெய்து விடாதீர்கள்“ கதறி அழுததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் மார்ச் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைவதற்காக கொடகமவில் இருந்து வந்ததாக விசாரணைகளின் மூலம் தகவல் கிடைத்துள்ளது. தாம் சட்டத்தரணி ஒருவருடன் காரில் வந்ததாகவும் பொலிஸாரின் விசாரணையின் போது பொரு மூனா தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாம் பிடிபட்ட பின்னர், விமான நிலையத்தில் இருந்தபோதே லலித் கன்னங்கரவை அழைத்து இதுபற்றி கூறியதாகவும் அவர் கூறியிருந்தார். ஹன்வெல்ல கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிசார் தம்மை தேடி வந்த போது ஹெட்டிபொல ரிட்டதெனிய ஸ்ரீ ஜய லங்காராம விகாரையில் சில நாட்களாக தலைமறைவாக இருந்ததாகவும் பொரு மூன தெரிவித்திருந்தார்.
விமான நிலைய பொலிசார் தம்மை கைது செய்த பின்னர் தன்னை சிறையில் அடைக்கவில்லை என்றும் அவர் விசாரணையின் போது கூறியிருந்தார். பொலிஸ் சார்ஜென்டிடம் சிகரெட் வாங்கி புகைத்ததாகவும் கூறியிருந்தார். ரிட்டதெனிய விகாரையின் பிக்குகள் இருவரும் லலித் கன்னங்கரவின் செய்தியுடன் பொலிஸாரிடம் வந்ததாக பொரு மூன தெரிவித்தார்.
தன்னை விடுவிப்பதற்கான பெரும் நடவடிக்கையில் லலித் கன்னங்கர ஈடுபட்டுள்ளதாகவும், வாகனம் ஒன்றை தயார் செய்து பொலிஸுக்கு அனுப்புவதாகவும் இரண்டு பிக்குகள் தன்னிடம் கூறியதாகவும் பொரு மூனா பொலிஸாரிடம் தெரிவித்தார்.
லலித் கன்னங்கர பொலிஸ் நிலையத்திற்கு ஒரு காரை அனுப்பியதாகவும், அந்த காரில் இருந்து இறங்கி வந்த ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குள் வந்து, நாற்காலியில் அமர்ந்திருந்த போது அவருக்கு சமிக்ஞை செய்ததாகவும், அங்குள்ள பொலிஸ் சார்ஜென்டிடம், “என்னுடைய நண்பர் ஒருவர் வந்துள்ளார், அவரிடம் ஒரு போத்தல் உள்ளது, குடிப்போம்” என்று கூறியதாகவும், பின்னர் போத்தலைக் கொண்டுவருவது என்ற போர்வையில் காரில் சென்று ஏறி தப்பிச் சென்றதாகவும் கூறினார்.
அன்று பொலிஸாரிடம் இருந்து தப்பிய பொரு மூனா நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரண்டு நாட்கள் தங்கியிருந்துள்ளார். அப்போது அவர் குருநாகல் சென்றிருந்தார். அங்கிருந்து சட்டத்தரணி ஒருவருடன் தம்புள்ளை சென்றிருந்தார்.
மரதன்கடவளையில் உள்ள வீடொன்றில் சட்டத்தரணி அவரை பல நாட்களாக மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சட்டத்தரணி ருவன்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் தெரியவந்துள்ளது. இடம் விட்டு இடம் தப்பிச் செல்ல முடியாமல் தவித்த பொரு மூனா இறுதியாக நீதிமன்றத்தில் சரணடைய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சட்ட உதவி வழங்க சட்டத்தரணிகள் அதிக பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
லலித் கன்னங்கர தனக்கு 1 மில்லியன் ரூபாவை அனுப்பிவைக்கும் வரை பொரு மூனா தலைமறைவாக இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. இது வழக்கறிஞர்கள் கேட்ட கட்டணமாகும். செலுத்தப்பட்ட பணம் குறித்த விவரங்கள் தனக்குத் தெரியாது என்று பொரு மூனா அவர்களிடம் கூறியதாக மேல் மாகாணத்தின் வடக்கு மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.




