இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (19) நடைபெறவுள்ளது.
மன்னார், தாழ்வுப்பாடு வீதியிலுள்ள ஹொட்டல் ஒன்றில் காலை கூட்டம் ஆரம்பிக்கிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து இலங்கை தமிழ் அரசு கட்சி வெளியேறிய போதும், கட்சியுடன் இணைந்து வெளியேறாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பிலேயே அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுப்பது பற்றி இன்று ஆராயப்படும்.
இதுதவிர, கட்சி தொடர்பான மேலும் சில விடயங்களும் ஆராயப்படும். கூட்ட நிகழ்ச்சி நிரலில் இல்லாத போதும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பின்னணியிலான ஐக்கிய தேசிய கூட்டமைப்பு (தராசு சின்னம்) கட்சியுடன் கூட்டணி அமைத்த விவகாரம் விஸ்பரூபம் எடுக்குமென தெரிகிறது.
எந்த தரப்புடனாவது கூட்டணி வைத்து போட்டியிட்டு உள்ளூராட்சிசபை உறுப்பினர்களாகி விட வேண்டுமென கரைத்துறைப்பற்று பிரதேச தமிழ் அரசு கட்சி உறுப்பிர்கள் அடம்பிடிக்க, தமிழ் அரசு கட்சிக்குள் சிறிய குழுவான எஞ்சியுள்ள தமிழ் தேசிய உணர்வாளர்கள் அதை எதிர்க்கிறார்கள். குறிப்பாக, கிழக்கை சேர்ந்த பலர் இந்த கூட்டணியை எதிர்க்கிறார்கள்.
இதனால் இன்று, முல்லைத்தீவு அணியும், சுமந்திரன் அணியும் இணைந்து முஸ்லிம் கூட்டணி விவகாரத்தை ஆதரிக்க, ஏனைய தரப்புக்கள் எதிர்க்கக்கூடும்.