29.8 C
Jaffna
March 29, 2024
இந்தியா

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி மனோஜ்பாண்டியன், வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமரேஷ்பாபு முன் அவசர வழக்குகளாக இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், மணிசங்கர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர், பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் பெற்று விட்டு மாலை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது எனவும், வேட்புமனு தாக்கல் இன்று மாலை நிறைவு பெற்று விட்டதாக கூறி பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படலாம் என்பதால் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

”உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டது, நீதிமன்ற நடைமுறையை தவறாகப் பயன்படுத்துவதைப் போன்றது. நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதாவை அறிவித்துவிட்டு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவே கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம்.

தேர்தல் ஆணையம் இன்னும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கே கடிதங்களை அனுப்புகிறது. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான தகுதியை திருத்தியதன் மூலமும், சனி, ஞாயிற்று கிழமைகளில் வேட்புமனு தாக்கல் செய்யக் கூறியதன் மூலமும் மற்றவர்கள் போட்டியிட விடாமல் தடுக்கப்பட்டுள்ளது.

கட்சியில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதா? பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்க வேண்டிய அவசரம் என்ன? ஒருவரே வேட்புமனு தாக்கல் செய்து, அவரையே ஒருமனதாக தேர்ந்தெடுத்து விடுவார்கள். எனவே, தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால் தீர்மானங்களை எதிர்த்த வழக்குகள் செல்லாததாகி விடும்” என மனுதாரர்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

தொடர்ந்து அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வைத்தியநாதன் மற்றும் விஜய் நாராயண் ஆகியோர், ”பொதுச்செயலாளர் தேர்தல் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் மூலமே நடத்தப்படுகிறது. இந்த ஒன்றரை கோடி உறுப்பினர்களில் 1 சதவீதம் பேர் கூட பன்னீர்செல்வத்தை ஆதரிக்கவில்லை. உள்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. தேர்தல் நடைமுறை துவங்கி விட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைமுக மனுதாரர்களாக உள்ள மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகிய மூவருக்கும் இந்த வழக்கை தொடர அடிப்படை உரிமையில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டு எட்டு மாதங்களுக்குப் பின் தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஜூலை 11ல் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் அமலுக்கு வந்து விட்டன. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது” என வாதிட்டனர்.

மேலும், ”கட்சியின் அடிப்படை உறுப்பினர்களும், பொதுக்குழுவும் ஒற்றைத் தலைமையை விரும்புகிறார்கள். அசாதாரண சூழலில் கட்சியின் எதிர்கால நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. கட்சி செயல்பட அனுமதிக்க வேண்டும். கட்சி விதிகளை எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம். சூழ்நிலைகள் மாறியதால் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. பொதுக்குழு உறுப்பினர்களில் 2501 பேர் ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கூடாது” என அவர்கள் வாதிட்டனர்.

இதையடுத்து, பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது தொடர்பான தீர்மானத்தையும் எதிர்த்துள்ளதால், ஏப்ரல் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்ட வழக்குகளை, வரும் 22ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டு முடிக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதி, அத்தனை வழக்குகளையும் வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், தேர்தல் நடைமுறைகளை தொடர அனுமதித்த நீதிபதி, தீர்மானத்தை எதிர்த்த வழக்குகளில் தீர்ப்பளிக்கும் வரை, தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என உத்தரவிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள…” – சினிமா வசனம் பேசி விஜய பிரபாகரன் வாக்கு சேகரிப்பு

Pagetamil

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கேஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் விசாரிக்க அனுமதி

Pagetamil

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

Leave a Comment