தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு முஸ்லிம் கூட்டணி தவறுதான்… கட்சியின் தலைவர் நானா- மாவைக்கு வந்த குழப்பம்: இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுவில் நடந்தது என்ன?

இலங்கை தமிழ் அரசு கட்சியினர் கரைத்துறைப்பற்றில் முஸ்லிம் தரப்புடன் கூட்டணி வைத்தது தவறான நகர்வு என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் ஏகமனதாக கருத்து தெரிவித்தனர்.

அத்துடன், உள்ளூராட்சிசபைக்கான யாழ்ப்பாணம், திருகோணமலை வேட்பாளர் தெரிவில் திருப்தியின்மை உள்ளதால் அது தொடர்பில் ஆராய குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (19) மன்னாரில் தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு வந்தவர்களிற்கு தமிழ் அரசு கட்சியின் திருமலை மாவட்ட இளைஞரணி தரப்பிலிருந்து கடிதங்களும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில், திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சிசபை வேட்பாளர் தெரிவு குளறுபடிகள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்றைய கூட்டத்தின் போது, முன்னாள் எம்.பி அரியநேந்திரன் இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டினார். “திருகோணமலை வேட்பாளர் தெரிவு முறையாக நடக்கவில்லையென முறைப்பாடுகள் உள்ளன“ என்றார்.

இதனால் கோபமடைந்த திருகோணமலை குகதாசான், “திருகோணமலை மாவட்டத்தில் வேட்பாளர் தெரிவு சரியாக நடக்கவில்லையென உங்களிற்கு யார் சொன்னார்கள்?“ என்றார்.

“இதை நான் சொல்லவில்லை. திருகோணமலையிலுள்ளவர்களே சொல்லியுள்ளனர்“ என கடித விவகாரத்தை சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்து தெரிவித்த கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா- “இரா.சம்பந்தன் நேற்று மாலை எனக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து, திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி வேட்பாளர் தெரிவில் திருப்தியின்மை உள்ளதால், அது பற்றி ஆராய குழுவொன்று நியமித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளார். அதை நாங்கள் செய்ய வேண்டும்.

அத்துடன், என்னிடமும் ஒரு கோரிக்கையுள்ளது. யாழ்ப்பாணத்திலும் இதேவிதமான நிலைமையேயிருந்தது. அங்கு நடந்த வேட்பாளர் தெரிவு எனக்கும் தெரியவில்லை. யாழ்ப்பாண வேட்பாளர் தெரிவு விடயத்தையும் அந்தக்குழு ஆராய வேண்டும்“ என்றார்.

கட்சியின் பொருளாளர் கனகசபாபதி மற்றொரு விடயத்தை சுட்டிக்காட்டினார். இலங்கை தமிழ் அரசு கட்சியின் மார்ட்டின் வீதி அலுவலகத்தில் வேட்பாளர் படிவம் நிரப்பப்படவில்லை. கையெழுத்து பெறப்படவில்லை. அனைத்தும் சுமந்திரன் வீட்டில் நடந்தது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் வரலாற்றில் ஒரு போதும் இப்படி நடந்ததில்லை என்றார்.

துணைப்பொதுச்செயலாளர் குலநாயகமும் இதை ஆமோதித்தார்.

இதற்கு சுமந்திரன் விளக்கமளித்த போது, கட்சியின் தீர்மானத்தின்படி மாவட்டக் கிளையினரே வேட்பாளர் தெரிவில் செயற்பட்டதாகவும், தனக்கும் தெரியாது என்று கூறினார். அத்துடன், கட்சி அலுவலகத்திற்கு வெளியே வைத்து விண்ணப்பப்படிவம் நிரப்பப்பட்ட சம்பவம் நிகழ்ந்தாகவும் கூறினார்.

இந்த விவகாரத்தின் போது கருத்து தெரிவித்த மாவை சேனாதிராசா, உணர்வுபூர்வமாக பேசினார். 20 வயதிலிருந்து கடந்த 60 வருடமாக கட்சியில் இருப்பதாக குறிப்பிட்டவர், தான் தற்போது கட்சியின் தலைவரா என்பது கூட தனக்கு சந்தேகம் எழுவதாக தெரிவித்தார்.

கரைத்துறைப்பற்று பிரதேசசபை தேர்தலில் தராசு சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கூட்டமைப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர்கள் போட்டியிடுவதற்கும் பரவலாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தையும் பா.அரியநேந்திரனே எழுப்பினார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பினாமி கட்சியில் தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் போட்டியிடுவது தவறானது, கட்சிக்குள் இது பற்றி முறைப்படி விவாதிக்கப்படவில்லை, இந்த முடிவால் கட்சிக்கு- குறிப்பாக கிழக்கில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன்போது எம்.ஏ.சுமந்திரன்- “அரியநேந்திரன் சொல்வது சரி“ என குறிப்பிட்டு, அது பற்றிய விளக்கத்தையளித்தார்.

எம்.ஏ.சுமந்திரன் கட்சிக்குள் விடயங்களை விவாதித்து முடிவெடுப்பதில்லை, அதனால்தான் இப்படியான சிக்கல்கள் நடக்கிறது. முடிவெடுத்து செயற்படுத்தி விட்டுத்தான் கட்சிக்கு கூறுகிறார் என சிறிதரன் எம்.பி கூறினார்.

அத்துடன், தராசு சின்னத்தில் போட்டியிடும் அணி ஒரு சுயேச்சைக்குழுவென தான் நினைத்ததாகவும், பின்னர்தான் முஸ்லிம் காங்கிரசின் பினாமி அரசியல் கட்சியென தெரிய வந்ததாகவும் கூறினார்.

கட்சித்தலைவர் மாவை சேனாதிராசாவும், அது சுயேச்சைக்குழுவென்றெ தான் நம்பியிருந்ததாகவும், பின்னரே அரசியல் கட்சியென தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டார்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கருத்து தெரிவித்த போது, “இந்த விடயம் எனது மாவட்டத்தில் நடந்துள்ளது. இது பற்றி ஒன்றுமே நான் அறியவில்லை. இதில் எனக்கும் உடன்பாடில்லை. நான் ஏற்றுக்கொள்ளவில்லை“ என்றார்.

மட்டக்களப்பு முன்னாள் எம்.பி சீ.யோகேஸ்வரன் கூறிய போது, “முஸ்லிம் தரப்பு தமக்கு தேவையான சமயத்தில் தமிழ் தரப்பை பயன்படுத்தி பலனடைந்து விட்டு, எம்மை கைவிட்டு விடுவார்கள். கிழக்கு மாகாணசபையில் அவர்கள் 7 ஆசனம் எடுத்து, 11 ஆசனம் எடுத்த எம்மை பயன்படுத்தி ஆட்சியமைத்தனர். பின்னர், தமது இராஜதந்திரத்தின் மூலமே ஆட்சியமைத்ததாக கூறுகிறார்கள். அரசியலில் தொடர்ந்து அப்படித்தான் செயற்பட்டு வருகிறார்கள்“ என்றார்.

எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்த போது, தமிழ் அரசு கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதும், ரவூப் ஹக்கீமே தன்னை தொடர்பு கொண்டு தராசு சின்னத்தில் போட்டியிடலாமென குறிப்பிட்டதாக கூறினார்.

இதன்போது, சாள்ஸ் நிர்மலநாதன் குறுக்கிட்டு, “நான் நாடாளுமன்றத்தில் ஹக்கீமை கேட்டேன். சுமந்திரனே தன்னிடம் இந்த விடயம் பற்றி கேட்டதாக கூறினார்“ என்றார்.

சுமந்திரன் இதை மறுத்தார். சாள்ஸ் நிர்மலநாதன் விட்டுக்கொடுக்கவில்லை.

இதனால் கோபமடைந்த சுமந்திரன் “அப்படியென்றால் நான் சொல்வதை நம்பவில்லையா? என்னில் உங்களிற்கு நம்பிக்கையில்லையா?“ என்றார்.

“நம்பிக்கை இல்லாததால்தானே கேட்கிறோம்“ என்றார் சாள்ஸ் நிர்மலநாதன்.

கரைத்துறைப்பற்று வேட்பாளர் பீற்றர் இளஞ்செழியன், “மட்டக்களப்பில் பல உள்ளூராட்சிசபைகளில் முஸ்லிம்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண தேர்தலில் 11 ஆசனம் எடுத்த தமிழ் அரசு கட்சி, ஏன் முஸ்லிம்களிடம் ஆட்சியதிகாரத்தை விட்டுக்கொடுத்தது. 2013ஆம் ஆண்டில் வடமாகாணசபை தேர்தலின் பின்னர் அஸ்மினிற்கு ஏன் பதவிவழங்கினார்கள் என்றார்.

எனினும், அந்த வாதம் தவறாது என கூட்டத்திலிருந்தவர்கள் சுட்டிக்காட்டினர். தேர்தலில் வென்ற பின்னர் ஆட்சியமைக்க மற்றொரு கட்சியுடன் கூட்டணி வைப்பது வேறு, இன்னொரு கட்சியுடன் இணைவது வேறு என சுட்டிக்காட்டினர்.

இதை புரிய வைக்க, கட்சியின் பதில் செயலாளரிடம் ஒரு கேள்வியெழுப்பப்பட்டது. கரைத்துறைப்பற்றில் முஸ்லிம் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுபவர்களிற்கு ஒழுக்காற்று நடவடிக்கையெடுப்பது நீங்களா, தராசு செயலாளரா என கேட்கப்பட்டது. தராசு செயலாளர்தான் என பதிலளித்தார்.

ஒருவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையெடுப்பதெனில் சுமந்திரன் குறிப்பிட்டு, அவர் ஹக்கீமிடம் குறிப்பிட்டு, பின்னர் ஹக்கீம் தராசு செயலாளரிடம் கூறித்தான் அது நடக்கும். இந்த இடத்தில் எமது கையில் எதுவுமேயில்லையென சுட்டிக்காட்டினர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கன், கரைத்துறைப்பற்று முஸ்லிம் கூட்டணியை எதிர்த்தனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் அடுத்த தேசிய மாநாடு மே அவ்வது யூனில் நடக்குனெ அறிவிக்கப்பட்டது. இதற்கேற்ப ஏப்ரல் 25ஆம் திகதிக்கு முன்னர் கட்சியின் மாவட்ட கிளை நிர்வாகத்தை தெரிவுசெய்யும்படி கோரப்பட்டது.

கட்சியிலிருந்து விலகி பிற கட்சிகளில் தேர்தலில் போட்டியிடும் 16 பேரிடமும் விளக்கம் கோரிய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

கஜேந்திரகுமார் எம்.பியை துப்பாக்கியால் சுட முயற்சியா?: இன்று மருதங்கேணியில் நடந்தது என்ன?

Pagetamil

நாட்டை விற்கப்போகிறார்கள் என்ற தவறான பிரச்சாரமாம்: ஜனாதிபதி நாட்டுக்கு ஆற்றிய உரை; ஊழல் குறித்தும் மெத்தனம்!

Pagetamil

நான் ‘இடும் சாதி’; கொழும்பில் வளர்ந்தால் சாதி பற்றி அறிந்திருக்கவில்லை: விக்னேஸ்வரன் பகிரங்க விளக்கம்!

Pagetamil

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

Pagetamil

இலங்கையில் பிரமிட் மோசடியில் ஈடுபடும் 8 நிறுவனங்கள்: இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!