காதல் விவகாரத்தில் பிளஸ்-1 மாணவியுடன் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞன், போலீஸ் நிலையத்தி கண்ணாடியால் கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்தவர் பிரசாந்தன் துஷாந்தன் (20). பெயிண்டரான இவர் எட்டயபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவியை காதலித்து வந்தார்.
கடந்த 4ஆம் திகதி துஷாந்தனும், அந்த மாணவியும் மாயமானார்கள். இது குறித்து மாணவியின் பெற்றோர் எட்டயபுரம் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகம்மது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், துஷாந்தன் பிளஸ்-1 மாணவியை அழைத்துக் கொண்டு பழனிக்கு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து பொலிசார் அங்கு சென்று, அவர்கள் 2 பேரையும் மீட்டு நேற்று முன்தினம் மதியம் எட்டயபுரம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அப்போது துஷாந்தன் மாணவியை கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.
பின்னர் துஷாந்தன் இயற்கை உபாதை கழித்து வருவதாக கூறிவிட்டு கழிப்பறைக்கு செல்வதற்காக வெளியே வந்தார். அப்போது பொலிஸ் நிலைய வளாகத்தில் இருந்த கண்ணாடி டம்ளரை எடுத்த துஷாந்தன் திடீரென்று அதை உடைத்து கண்ணாடி துண்டால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.
இதில் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வரவே அவர் மயங்கி விழுந்தார்.
உடனே போலீசார் ஓடி வந்து அவரை மீட்டு எட்டயபுரம் அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மீட்கப்பட்ட மாணவி தூத்துக்குடி அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.