இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயற்குழு கூட்டம் மன்னாரில் நடைபெறவுள்ளது. இதன்போது, இனப்பிரச்சினை தீர்வு விவகாரம் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் தமிழ்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் 19ஆம் திகதி மன்னாரில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில், ஒற்றுமை விவகாரத்தை பேசவுள்ளதாக மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
இது தொடர்பில் தமிழ்பக்கத்திடம் கருத்து தெரிவித்த மாவை சேனாதிராசா-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகள் தனித்து தேர்தலை எதிர்கொண்டாலும், தொடர்ந்தும் கூட்டமைப்பாகவே செயற்படுகின்றன. தமிழ் அரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களே அனைவரும்.
உள்ளூராட்சி தேர்தலுக்காக தனித்து போட்டியிட்டாலும், இனப்பிரச்சனை தீர்வு உள்ளிட்ட அரசியல், அன்றாடப் பிரச்சினைகளில் தமிழ் தரப்புக்கள் ஒருமித்து செயற்படுவது தொடர்பில் செயற்குழு கூட்டத்தில் பிரேரணை சமர்ப்பிக்கவுள்ளேன் என தெரிவித்தார்.




