வடமாகாணத்தில் கால்நடைகளுக்கு இலம்பி- இறுகிய தோல் நோய் (Lumpy Skin Disease) பரவி வருவதாக அமைச்சின் கால்நடை அபிவிருத்திப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நோய் நிலைமையை உடனடியாக ஆராயுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கால்நடை அபிவிருத்தி பிரிவுக்கு நேற்று (7) பணிப்புரை விடுத்துள்ளார் என மேலதிக செயலாளர் கலாநிதி எல்.டபிள்யூ.என்.சமரநாயக்க தெரிவித்தார்
2019 ஆம் ஆண்டு இலங்கையில் முதல் தடவையாக பதிவாகியிருந்ததுடன் அதற்கு முன்னர் இந்த நோய் நாட்டில் பதிவாகவில்லை.
வைரஸ் மூலம் பரவும் இந்த நோயால் கால்நடைகள் அரிதாகவே உயிரிழக்கின்றன. தோலில் உருவாகும் கட்டிகள் காயங்கள் விழுந்து சிகிச்சையின் மூலம் குணமாகும்.
மேலும், இந்த நிலை வைரஸால் ஏற்படுவதால், ஒருமுறை நோய் தாக்கிய மாடு மீண்டும் நோய் தாக்கும் வாய்ப்பு இல்லை.
இந்நோய் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், கால்நடை அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நோய் கால்நடைகளுக்கு வரும் கால் மற்றும் வாய் நோய் போல காற்றினால் பரவாது. மற்ற விலங்குகளுடன் நேரடி தொடர்பு மூலம் மட்டுமே நோய் பரவுகிறது. எனவே, நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை மாட்டுத் தொழுவங்களில் இருந்து விலக்கி தனிமைப்படுத்த வேண்டும்.
தற்போது வடமாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் இந்நோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விசேட கால்நடை வைத்தியர் குழுவொன்று இன்று ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்நோய் மற்ற பகுதிகளுக்கு பரவுவதை தடுக்கும் வகையில், வடமாகாணத்தில் இருந்து விலங்குகள் மற்றும் விலங்கு பொருட்களை கொண்டு செல்வது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
நுவரெலியா போன்ற கால்நடை வளர்ப்பு சிறப்பாக மேற்கொள்ளப்படும் மாவட்டங்களில் பால் சேகரிப்பு கொள்கலன்களை கிருமி நீக்கம் செய்த பின்னரே கால்நடை வளர்ப்பு பண்ணைகளுக்கு வெளியாட்களை அறிமுகப்படுத்தி நோய்களை தடுப்பதற்கு விவசாய அமைச்சு ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.