ஒப்பந்தக் கொலைகாரன் புரு மூனா என்பவருக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வந்த பெலலந்துடுவ மில்லனிய பகுதியை சேர்ந்த தம்பதி, நேற்று முன்தினம் நுவரெலியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய குடிவரவு, குடியல்வு திணைக்களத்தினரால் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், புரு மூனா தப்பிச் சென்றது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்த செய்தியாக வெளியாகியிருந்தது. அவர் பொலிசாரிடம் சிக்கியதை அறிந்ததும், அவருக்கு அடைக்கலம் கொடுத்த தம்பதி வீட்டிலிருந்து தலைமறைவாகியிருந்தது.
நுவரெலியா, கிரிகோரி ஏரிக்கு அருகில் தமது இரு குழந்தைகளுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் சுமார் 9 கொலைகளை செய்தவர் என கருதப்படும் புரு மூனா என அழைக்கப்படும்
பெப்ரவரி 24 ஆம் திகதி மாலை பாதுக்கவில் வசிக்கும் நபர் என போலியான கடவுச்சீட்டுடன் டுபாய் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த ‘புரு மூனா’ நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் காவலில் இருந்த போதிலும், ‘புரு மூனா’ சிறையில் அடைக்கப்படவில்லை. இரண்டு பிக்குகள் தலையிட்டதை தொடர்ந்து, பெப்ரவரி 25 அன்று அதிகாலை காவல் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றார். தப்பியோடியபோது இந்த நபர், தற்போது கைதாகியுள்ள தம்பதிக்கு போன் செய்து தான் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.
எனவே, சில நாட்கள் வீட்டை விட்டு வெளியில் இருக்குமாறு ‘புரு மூனா’ தம்பதியிடம் கூறியதாக விஷேட அதிரடிப் படையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு தம்பதியினருக்கு அறிவித்த பின்னர், ‘புரு மூனா’ தனது கைத்தொலைபேசியை அணைத்து வைத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
‘புரு மூனா’ வின் தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, இந்த தம்பதியினர் 25ஆம் திகதி காலை மில்லனியவில் உள்ள தமது வீட்டில் இருந்து ஆடைகளை எடுத்திக்கொண்டு தங்களுக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியில் புறப்பட்டுள்ளனர்.
அன்று பிற்பகலில், இத்தாலியில் இருந்து மனைவியின் கணக்கில் ரூ.50,000 வரவு வைக்கப்பட்டுள்ளது, இத்தாலியைச் சேர்ந்த ரத்கம விதுர தம்பதியினரே (இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்) பணத்தை வைப்பிலிட்டனர். விசாரணைகளின் போது இதுவும் தெரியவந்துள்ளது. அவர்கள் கைவிடப்பட மாட்டார்கள் அல்லது மறக்கப்பட மாட்டார்கள் என்று தம்பதியினர் கூறியதாகக் கூறப்படுகிறது.
இந்த தம்பதியினர் தமது இரண்டு பிள்ளைகளுடன் முச்சக்கர வண்டியில் ஹன்வெல்ல பகுதிக்கும் அங்கிருந்து அவிசாவளை ஊடாக ஹட்டனுக்கும் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
25ஆம் திகதி இரவை ஹட்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கழித்த அவர்கள் பின்னர் 26 ஆம் திகதி நுவரெலியா சென்றுள்ளனர். சில நாட்கள் அங்கு தங்கியிருந்த அவர்கள் பின்னர் கேகாலை வந்து ஓரிரு நாட்கள் அங்கு தங்கியிருந்தனர். பின்னர் நுவரெலியாவுக்குத் திரும்பி உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் போல் அங்கேயே தங்கியுள்ளனர்.
தம்பதிகள் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் விசேட அதிரடிப் பிரிவினரால் மேலும் பல தகவல்களைக் கண்டறிய முடிந்தது.
இதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை (05) நுவரெலியா சென்று தங்கியிருந்த தம்பதிகளை இரவு உணவு அருந்தி விட்டு சென்ற போது கிரிகோரி ஏரிக்கு அருகில் வைத்து கைது செய்துள்ளனர். முச்சக்கர வண்டியில் அவர்களின் 8, 5 வயதான பிள்ளைகளும் இருந்துள்ளனர்.
கே.டி.லக்ஷான் சாமர மெண்டிஸ் (34) மற்றும் ரவீனா நிலக்ஷ ஹேரத் (31) ஆகிய இருவருமே பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லக்ஷான் சாமர என்ற நபர் கொழும்பு, பராக்கிரம முகாமில் கடமையாற்றிய கடற்படையின் மரைன் பொறியியலாளர் என்பது விசாரணைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டது. ‘புரு மூனா’வும் சில காலம் கடற்படையில் பணியாற்றியவர். நுவரெலியாவில் வைத்து கைது செய்யப்பட்ட நபர் மற்றும் ‘போரு மூனா’ இருவரும் கடற்படையில் பணியாற்றிய போது ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்றும், அவர்கள் நண்பர்கள் என்றும் அவர்கள் இருவரும் இலக்கு துப்பாக்கிச் சூடு சம்பியன் வீரர்கள் என்றும் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது. இந்த சந்தேக நபரும் ‘புரு மூனா’வும் இலக்கு துப்பாக்கி சுடும் போட்டிகளில் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர்.
கடற்படை உறுப்பினரான கணவர் பலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர். மனைவி அளுத்கமவைச் சேர்ந்தவர். திருமணத்திற்குப் பிறகு அவர்கள் மில்லனியவில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கடற்படையைச் சேர்ந்த இந்த நபர் காலையில் முகாமுக்குச் சென்று மாலையில் வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர். அவர் பெப்ரவரி 22 அன்று விடுமுறையில் இருந்தார், பெப்ரவரி 25 ஆம் திகதி வேலைக்குத் திரும்புவார் என்று STF தெரிவித்துள்ளது. அந்த நாட்களில் அவர் தனது நண்பரான ‘புரு மூனா’ டுபாய்க்கு செல்லவிருந்ததால் அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்காக விடுமுறையில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரத்கம விதுர இத்தாலியில் இருந்து இலங்கைக்கு அவ்வப்போது ‘புரு மூனா’விற்கு பணத்தை அனுப்பியதாகவும், தற்போது காவலில் உள்ள மனைவியின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது.
இத்தாலியில் இருந்து அவரது வங்கிக் கணக்கில் வெவ்வேறு திகதிகளில் ரூ. 300,000.வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணத்தைப் பயன்படுத்தி ‘புரு மூனா’ என்பவர் வேறொருவரின் பெயரில் பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் திகதி இந்த பாஸ்போர்ட்டை பெற்றார்.
இந்த கடவுச்சீட்டை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு, குறிப்பிட்ட ஏஜென்சி மூலம் வேலைக்காக டுபாய் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்ததாக மேலும் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) பயிற்சி நெறியிலும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது, நுவரெலியாவில் வைத்து கைது செய்யப்பட்ட கணவரே இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார்.
கைதானவரே ‘புரு மூனா’வை ஒவ்வொரு இடத்துக்கும் அழைத்துச் சென்றார்.
“SLBFE இல் தன்னைப் பதிவு செய்து, டுபாய்க்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டது விமான நிலையத்தில் சந்தேகத்திற்கு ஆளாகக் கூடாது என்பதற்காகவே என வெளிப்படையாகத் தெரிகிறது,” என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
‘புரு மூனா’ இறுதி இரண்டு வாரங்களை மில்லனியவில் உள்ள வீட்டில் கழித்தார். கைதான தம்பதியினரே அவருக்கான ஆடைகளையும் தயார் செய்தனர்.
சிறிய வாடகை வாகனத்தில் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த வானின் ஓட்டுனர் இல்லாததால், அயலில் உள்ள ஒருவரை சாரதியாக ஏற்பாடு செய்துள்ளனர். ‘புரு மூனா’ அல்லது அவரது குற்றங்கள் பற்றி அறியாத இந்த சாரதி, சந்தேகத்தின் பேரில் பெப்ரவரி 25 ஆம் திகதி நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
பெப்ரவரி 24 அன்று, தம்பதியினர் ‘புரு மூனா’வுடன் தங்கள் இளைய குழந்தையையும் தங்களுடன் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் மூத்த குழந்தையை டியூஷன் வகுப்பில் இறக்கிவிட்டு விமான நிலையத்திற்குச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் ‘புரு மூனா’வை விமான நிலையத்தில் இறக்கிவிட்டு, அதே வானில் மில்லனியவுக்குத் திரும்பியதாகத் தெரியவந்தது. பின்னர் வாகனத்தை திருப்பி கொடுத்துவிட்டு வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தமது வளர்ப்பு நாயை வீட்டில் விட்டுவிட்டே சென்றனர். பின்னர், இத்தாலியில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நாயை எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.