ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தற்போது தனது காதலியும் முன்னாள் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றவருமான அலினா கபேவாவுடன் மொஸ்கோவில் வசித்து வருவதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொஸ்கோவில் இருந்து வடமேற்கே 400 கிமீ தொலைவில் உள்ள வால்டாய் ஏரியில் உள்ள புட்டின் தோட்டத்தில் உள்ள வில்லாவில் கபேவாவுடன் புடின் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
ரஷ்ய புலனாய்வு செய்தி வலைத்தளமான தி ப்ராஜெக்ட் இதனை தெரிவித்துள்ளது.
சர்வதேச ஊடகங்களில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைப் பற்றிய பல செய்திகள் அடிக்கடி வெளியாவதுண்டு. நாம் பார்ப்பது நிஜப் புடினே இல்லை; பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரைப்போலவே இருக்கும் வேறொருவரை, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வைக்கிறார்கள், புடின் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அவருக்கு இருக்கும் நோய்களைப் பற்றி யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று அவரது இயற்கை உபாதைக் கழிவுகளைக்கூடப் பெட்டியில் அடைத்து ரஷ்யாவுக்கு எடுத்துச் சென்றுவிடுவார்கள் என ரஷ்ய ஜனாதிபதி புடின் குறித்த ஏராளமான கிசுகிசு பாணித் தகவல்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அந்த வரிசையில், தற்போது மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி புடினும், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவாவும் காதலித்து வருகிறார்கள். அவர்களுக்குக் குழந்தைகள்கூட இருக்கின்றனர் என்ற செய்தி நீண்டகாலமாகச் சொல்லப்பட்டுவருகிறது.
2008, ஏப்ரல் மாதத்தில் முதன்முதலாக, மாஸ்கோஸ்வ்ஸ்கி கரெஸ்பாண்டென்ட் என்ற நாளிதழ், ‘புடினுக்கும் அலினாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது’ என்று செய்தி வெளியிட்டது. பின்னர், அந்தச் செய்திக்கு மறுப்பு வெளியிடப்பட்டதோடு, அந்த நாளிதழ் நிறுவனமும் மூடப்பட்டது. இதையடுத்து, 2013ஆம் ஆண்டில் ‘புடினின் குழந்தைக்குத் தாயாகிவிட்டார் அலினா’ என்றும், 2015ஆல் ஆண்டில், ‘சுவிட்சர்லாந்திலுள்ள மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தையையும், 2019ஆல் மொஸ்கோவிலுள்ள மருத்துவமனையில் இரட்டை ஆண் குழந்தைகளையும் அலினா பெற்றுக்கொண்டார். அவர்கள் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்குப் பிறந்த குழந்தைகளே’ என்றும் செய்திகள் கசிந்து பரபரப்பைக் கிளப்பின.
இந்த நிலையில், ரஷ்யாவில் தடைசெய்யப்பட்ட புலனாய்வுச் செய்தி நிறுவனமான த புராஜெக்ட் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் செய்தியில், ‘ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவிலிருந்து சுமார் 402 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் வால்டாய் ஏரிக்கு அருகே, தனது காதலி அலினாவுக்கு ஒரு வசந்த மாளிகையைக் கட்டியிருக்கிறார் புடின். 13,000 சதுரஅடியில் கட்டப்பட்டிருக்கும் அந்த மாளிகையின் மொத்த மதிப்பு 120 மில்லியன் அமெரிக்க டொலர். 2021இல் கட்டி முடிக்கப்பட்ட அந்த மாளிகையில் அலினா, அவரின் குழந்தைகள் உள்ளிட்டவர்கள் வசித்து வருகின்றனர்’ என்று தெரிவித்திருக்கிறது.
யார் இந்த அலினா?
39 வயதாகும் அலினா, உஸ்பெகிஸ்தான் நாட்டில் பிறந்தவர். ரஷ்யாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட ரிதமிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை. அவர் 2 ஒலிம்பிக் பதக்கங்கள், 14 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்கள் மற்றும் 21 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பதக்கங்கள் போன்ற பல விருதுகளை வென்றுள்ளார்.
அலினாவின் குடும்பம் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் இருந்து வந்தது. அவரது தந்தை மராட் கபாயேவ் ஒரு தொழில்முறை கால்பந்து வீரர். அவரது தங்கையான லெய்சன் கபேவா 2016 ஆம் ஆண்டு புடினால் டாடர்ஸ்தானில் உள்ள அல்மெட்யெவ்ஸ்க் நகர நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அலினாவின் தொழில் வாழ்க்கையின் காரணமாக அவரது குடும்பத்தினர் அடிக்கடி உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் ரஷ்யாவில் பல்வேறு இடங்களுக்குச் சென்றனர்.
2014ஆம் ஆண்டு, ரஷ்யாவின் தேசிய ஊடகக்குழுவின் இயக்குநர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். ‘எந்த அனுபவமும் இல்லாத ஒருவர் ஊடகக்குழு இயக்குநராக நியமிக்கப்பட்டதன் பின்னணியில் புடின் இருக்கிறார்’ என அப்போதே புகார்கள் எழுந்தன. புடினுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டுவந்ததால் சிறையிலடைக்கப்பட்ட ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னி, ‘ரஷ்யாவின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகையை, அலினாவுக்குச் சொத்துகள் வாங்கத்தான் பயன்படுத்துகிறார் புடின்’ என்று 2021ஆம் ஆண்டிலேயே குற்றம்சாட்டினார்.
புடின் மீது வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும், `இது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கட்டுக்கதை’ என்பதே ரஷ்யாவின் வழக்கமான பதிலாக இருந்திருக்கிறது. `அலினா விவகாரத்திலும் இதே பதில்தான் கடைப்பிடிக்கப்படுகிறது’ என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.



