தமிழக முதல்வரிடம் மனு கொடுக்க முண்டியடித்த பொதுமக்களை தடுத்து கோபப்பட்ட போலீஸாரிடம், ‘கோபப்படாதீங்க’ என ‘அட்வைஸ்’ செய்து முகமலர்ச்சியுடன் மனுக்களை பெற்றார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
‘களப் பணியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில், தமிழக அரசின் தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன்ரெட்டி, தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் மற்றும் வணிக சங்கங்கள், விவசாய சங்கங்கள், மீனவர் சங்கங்கள் மற்றும் பல்வேறு சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் கலந்துரையாடினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது மனுக்களைக் கொடுப்பதற்காக சாலையோரங்களில் பொதுமக்கள் காத்திருந்தனர். அவர்களை பார்த்தவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காரை விட்டு இறங்கினார். அப்போது அவருக்கு பாதுகாப்பாக இருந்த போலீஸார், தமிழக முதல்வரை சூழ்ந்துகொண்டு மனுக்களை கொடுக்க முண்டியடித்தவர்களை தடுத்து பொதுமக்கள் மீது கோபப்பட்டனர்.
அதனைப்பார்த்த தமிழக முதல்வர், தனக்கு பாதுகாப்பளிக்கும் போலீஸாரை பார்த்து ‘கோபப்படாதீங்க’ என்றார். போலீஸார் அதையும் கேட்காமல் மீண்டும் பொதுமக்களை கைகளால் தள்ளினார். மீண்டும் கவனித்த தமிழக முதல்வர், ‘சார், கோபப்படாதீங்க’ என போலீஸாரிடம் கூறி அவரை சமாதானப்படுத்தி முண்டியடித்த பொதுமக்களிடம் முக மலர்ச்சியுடன் மனுக்களை வாங்கினார். அப்போது அமைச்சர்கள் பி.மூர்த்தி, நேரு, பெரியசாமி ஆகியோர் உடன் நின்றனர். மனுக்களைப்பெற்ற தமிழக முதல்வர், பின்னர் காரில் ஏறி அரசு விருந்தினர் மாளிகைக்கு உணவருந்த சென்றார்.