26.3 C
Jaffna
January 2, 2025
Pagetamil
இந்தியா

டெல்லி அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ராஜினாமா

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

மதுபான ஊழல் வழக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, திங்கள்கிழமை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதேபோல், பண மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமைச்சரான சத்யேந்திர ஜெயினும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இருவரது ராஜினாமாக்களையும் முதல்வர் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்புலம்: டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இதன்படி 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. புதிய கொள்கையின்படி மதுக்கடை உரிமையாளர்கள் தாங்களே விலையை நிர்ணயித்து கொள்ளவும், வாடிக்கையாளர்களுக்கு இலவசங்களை வழங்கவும், வீடுகளுக்கு மதுபானங்களை நேரடியாக விநியோகம் செய்யவும் அதிகாலை 3 மணி வரை கடைகளை திறந்திருக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்தச் சூழலில் புதிய மதுபானகொள்கையின்படி மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கியது உட்பட பல்வேறு விவகாரங்களில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தலைமைச் செயலாளர் நரேஷ்குமார், டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் அறிக்கை அளித்தார். அதன்பேரில் சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார்.

கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 36 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஊழல் தொடர்பாக மணீஷ் சிசோடியாவிடம் பலமுறை விசாரணை நடத்தப்பட்டது. இதன்தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பங்கஜ் குப்தா கூறும்போது, “புதிய மதுபான கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும்” என்று கோரினார்.

மணீஷ் சிசோடியா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தயான் கிருஷ்ணன், மோகித் மாத்தூர், சித்தார்த் அகர்வால் ஆகியோர் கூறும்போது, “துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு பிறகே புதியமதுபான கொள்கை அமலுக்கு வந்தது. சிசோடியா நிதியமைச்சராக உள்ளார். அவர் டெல்லி பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டியபொறுப்பு இருக்கிறது. இந்த வழக்கு சிசோடியாவுக்கு எதிரான சதித் திட்டம்’’ என்று வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாக்பால், சிபிஐ கோரியபடி மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். இதன்படி மார்ச் 4-ம் தேதி வரை சிசோடி யாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. சிசோடியா கைதை கண்டித்து தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று போராட்டங்களை நடத்தினர்.

சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: மணீஷ் சிசோடியா உட்படவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 36 பேர் அடிக்கடி மொபைல் போன்களை மாற்றியுள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் மட்டும் சிசோடியா 18 மொபைல் போன்களையும் 4 சிம்கார்டுகளையும் பயன்படுத்தியுள்ளார். அவற்றை உடைத்து அழித்துள்ளார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் ஊழலில் தொடர்பிருக்கிறது. அவரிடம் விசாரணை நடத்தியிருக்கிறோம். இவ்வாறு சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பின்னடைவு: சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டு 10 மாதங்களாக சிறையில் உள்ளார். அமைச்சராக அவர் வகித்து வந்த துறைகள், மணிஷ் சிசோதியா வசம் ஒப்படைக்கப்பட்டன. இதன் காரணமாக மணிஷ் சிசோதியா வசம் நிதி, கல்வி, சுகாதாரம் உள்பட மொத்தம் 18 துறைகள் இருந்தன. தற்போது இருவரும் ராஜினாமா செய்திருப்பது ஆம் ஆத்மி அரசுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மியின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் இரு அமைச்சர்கள் ஊழல் வழக்கில் சிறை சென்றிருப்பது கட்சிக்கும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.931 கோடி சொத்து: இந்தியாவின் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு

Pagetamil

தடையை மீறி போராட்டம்: சென்னையில் சீமான் கைது

Pagetamil

சென்னையில் மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் முன்னாள் காதலருக்கு தூக்கு தண்டனை

Pagetamil

பாமக உட்கட்சி பிரச்சினை குறித்து மற்றவர்கள் பேச தேவையில்லை: அன்புமணி விளக்கம்

Pagetamil

75000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

east tamil

Leave a Comment