மனைவியை கள்ளக்காதல் செய்த நபரின் மனைவியை பழிக்கு பழியாக பாதிக்கப்பட்ட நபர் திருமணம் செய்து உள்ளார்.
பீகாரில் ககாரியா மாவட்டத்தில் ஹர்தியா கிராமத்தில் வசித்து வருபவர் நீரஜ். இவருக்கு 2009 ஆம் ஆண்டு ரூபி தேவி என்பவருடன் திருமணம் நடந்து உள்ளது. இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாக சென்ற இவர்களது வாழ்வில் திடீரென புயல் வீசியுள்ளது.
சமீபத்தில், ரூபிக்கு மற்றொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பது நீரஜுக்கு தெரிய வந்து உள்ளது. பஸ்ராஹா கிராமத்தில் வசிக்கும் முகேஷ் என்ற அந்த நபர் தினக்கூலியாக உள்ளார். அவருடன் ரூபிக்கு தகாத உறவு ஏற்பட்டு உள்ளது. திருமணத்திற்கு முன், ரூபி பஸ்ராஹா கிராமத்தில் வசித்தபோது, முகேசுடன் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்திருக்க கூடும் என நம்பப்படுகிறது.
முகேசுக்கும் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், முகேஷ் மற்றும் ரூபி இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு உள்ளனர். அதன்பின்னர் தங்களது 2 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் கிராமத்தில் இருந்து தப்பி வேறிடத்துக்கு சென்று உள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த நீரஜ், பஸ்ராஹா காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அதில், இந்த விவகாரத்தில் தீர்வு ஏற்பட கிராம பஞ்சாயத்து நடத்தப்பட்டது.
ஆனால், முகேஷ் அதற்கு ஒப்பு கொள்ளாமல் தப்பி வாழ்ந்து வருகிறார் என தெரிவித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து, பழிக்கு பழி வாங்கும் நோக்கில், மனைவியால் கைவிடப்பட்ட நீரஜ், முகேசின் மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டு உள்ளார். முகேசின் முதல் மனைவி பெயரும் ரூபி ஆகும். அவர் ஆம்னி கிராமத்தில் வசித்து வந்து உள்ளார்.
இந்நிலையில், நீரஜ் மற்றும் முகேசின் முதல் மனைவி ரூபி இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் உள்ளூர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
முகேசின் 2 குழந்தைகள் மற்றும் தனது ஒரு குழந்தை என 3 குழந்தைகள் நீரஜிடமும், நீரஜின் 3 குழந்தைகள் முகேசுடனும் வளர்ந்து வருகின்றன. இருவரின் மனைவி பெயரும் ரூபி என ஒரே பெயராக உள்ளன. 4 குழந்தைகளுக்கு தந்தையான நீரஜ், மனைவியால் கைவிடப்பட்ட நிலையில், பழிக்கு பழி வாங்கும் வகையில், மனைவியின் கள்ளக்காதலரான முகேசின் மனைவியை திருமணம் செய்தது அந்த கிராமத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.