மட்டக்களப்பு கொழும்பு வீதியின் அருகே வாகநேரியில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்த பெறுமதி வாய்ந்த பொருட்களும், ஆலயமும் இனம் தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு மக்கள் வலியுறுத்தினர்.
நேற்று முன்தினம் மேற்படி ஆலயத்திற்கு சென்ற ஆலயத் தலைவர் ஆலயத்தில் இடம்பெற்றிருந்த மேற்படி சம்பவம் தொடர்பாக அறிந்து ஆலய நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரியப்படுத்தியிருந்தார்.
பின்னர் ஆலய நிர்வாகம் குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள மட்டக்களப்பு தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது ஆலயத்தில் ஒன்று கூடிய பிரதேச மக்கள் சிலர் ‘கடவுளின் சிலைகளை உடைத்தால் கடவுள் உங்களை அழித்துவிடுவார்’ ‘ மக்களின் இயல்பு வாழ்க்கையை சீரழிக்காதீர்கள்’ மதம் என்பது எமது உரிமை மதஸ்த்தலங்களை அழிக்காதீர்கள்’ என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு சந்தேக நபர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் இறுதியில் ஆலயத்தில் பொங்கல் வைத்து பூசை வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.
-க.ருத்திரன்-




