அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சையால் ஓபிஎஸ், பழனிசாமி தரப்பினர் இரு அணிகளாக பிரிந்து செயல்படுகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் வலுத்து வரும் நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பு பொதுக்குழுவை கூட்டியது. அப்போது பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை பிறப்பித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் தொடர்ச்சியாக நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையி்ல், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பளித்தது. இதன்படி அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்த உத்தரவில் அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.