யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி, செவ்வாய்க் கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோண்டாவில் வடக்கிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது பூதவுடல் செவ்வாய்க் கிழமை காலை 7:30 மணிக்கு அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, பல்கலைக்கழகத்தில் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து, முற்பகல் 9:30 மணிக்கு பூதவுடல் மீண்டும் அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு முற்பகல் 10:30 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடாத்தப்பட்ட பின்னர் தகனக் கிரியைகளுக்காக இனுவில் கிழக்கு, காரைக்கால் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தராக்க் கடமையாற்றிய காலத்தில் பேராசிரியர் விக்கினேஸ்வரன் ‘தமிழமுதம்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டமைக்காகவும், பல்கலைக் கழகத்தினுள் நினைவுத் தூபி அமைக்கப்படுவதை தடுக்கத் தவறியமை தொடர்பிலும் இராணுவப் புலனாய்வு பிரிவினரின் அறிக்கையின் பேரில் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தினுள் மாவீரர் தினம் , தியாகி திலீபன், அன்னை பூபதி, பொன். சிவகுமாரன் முதலானோரின் நினைவு தினங்கள் அனுஸ்டிக்கப்படுவது வழமையாகும். அத்தகைய நிகழ்வுகள் அனைத்திலும் பல்கலைக்கழக துணைவேந்தராகப் பதவியில் இருக்கும் போது பங்கு பற்றிய ஒரே ஒரு துணைவேந்தர் என்று மாணவர்களால் மதிக்கப்பட்டவர் பேராசிரியர் விக்னேஸ்வரன்.
சகலரும் அஞ்சும் பொங்கு தமிழ் பிரகடனத் தூபியை மீளமைக்க மாணவர்களால் எடுக்கப்பட்ட முயற்சிக்குத் தடை ஏற்படுத்தாது, தமிழமுத விழா தினத்தில் தானே அதனைத் திறந்தும் வைத்தார். பல்கலைக் கழகத்தினுள் இருக்கும் மாவீரர் தூபியும் இவரது காலத்தில் புனரமைப்புச் செய்யப்பட்டது.
துணைவேந்தர் அலுவலகத்திற்குப் பின் புறமாக அமைக்கப்பட்டு, பின்னர் உடைத்து, திருப்பிக் கட்டப்பட்ட முள்ளிவாய்கால் தூபி பல்கலைக்கழகத்தின் மத்தியில் உள்ள வேறொரு இடத்தில் அத்திவாரம் வெட்டி ஆரம்பிக்கப்பட்டது. எனினும் அவ்விடத்தில் கட்டுவதற்கு பல்கலைக்கழகத்தின் அடுத்த மட்டத்தில் உள்ளவர்கள் மத்தியில் எதிர்ப்பு வந்ததனால், தற்போது தூபி உள்ள இடத்தில் கட்டுவதற்கு துணைவேந்தரின் உளரீதியான ஆதரவு இருந்தமையே தமது வெற்றிக்கு காரணம் என்று அன்றைய காலத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்த முன்னாள் மாணவன் ஒருவர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பிலான பதிவில் அவர் மேலும் குறிப்பிடுகையில், மீண்டும் புதிய இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அத்திவாரம் வெட்டி கட்டப்பட்டுக் கொண்டிருந்த போது அன்றைய உயர் கல்வி அமைச்சரும், இன்றைய நீதி அமைச்சருமான வியஜதாச ராஜபக்சவிடமிருந்து இருந்து காட்டமான கடிதம் துணைவேந்தருக்கு வந்தது. உடனடியாக அந்தத் தூபியின் கட்டுமானத்தை நிறுத்தும்படி. நாமும் சூழ்நிலையை புரிந்து நிதானமாக செயற்பட்டதால் அன்று அதனை அமைதியாக விட்டோம் பின்னர் படிப்படியாக சில வேலைகளை செய்து முழுமையாக்க முன் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்டதாலேயே அது இன்று பிரமாண்டமாக கட்டப்பட்டது.
அதிகாரத்தில் உள்ளவர் ஒரு தமிழ்தேசிய வாதியாக இருக்கும் போது எமது சிந்தனைகளை செயல்படுத்துவது இலகுவானது. இடை நடுவில் துணைவேந்தர் பதவிக்காலம் முடிய முன்னர் பதவி பறிக்கப்பட்ட பின் அவரைக் கௌரவிக்கும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அடுத்த தமிழமுதத்தின் பிரதம விருந்தினராக அழைத்து கௌரவித்திருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.