உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட சில எதிர்க்கட்சிகள், தேர்தலுக்கான நிதியை ஒதுக்கத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்து நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிற்கு சில எதிர்க்கட்சிகள் கடிதம் அனுப்பியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபால, சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, சுதந்திர மக்கள் பேரவையின் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும மற்றும் விமல் வீரவன்ச தரப்பினர் உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்து இந்த கடிதத்தை அனுப்பியுள்ளன.
அந்த கடிதத்தில், நிதியமைச்சின் செயலாளர் சிறிவர்தன, அரசியலமைப்பின் 104ஆவது பிரிவை மீறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிதியமைச்சகம் நிதி ஒதுக்காததால், உள்ளாட்சித் தேர்தலை மார்ச் 9, 2023 அன்று நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் எங்களுக்குத் தெரிவித்திருந்தார். அரசாங்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் திட்டமிட்டு தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் செயற்படுவதாகவே நாம் உணர்கிறோம்.
“உள்ளூராட்சித் தேர்தலுக்கு நிதி ஒதுக்காததன் மூலம் அரசியல் சாசனத்தின் 104வது பிரிவை மீறியுள்ளீர்கள். மேலும், 02/2023 எண். 3 சுற்றறிக்கையில், ஒத்திவைக்க முடியாத விஷயங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளீர்கள். எனவே, நிலைமையை சரிசெய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், நீங்கள் தவறினால் நாங்கள் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம், ”என்று கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.



