கடந்த திங்களன்று தென்மேற்கு துருக்கி, வடக்கு சிரியாவை உலுக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கங்கள் மற்றும் தொடர் அதிர்வுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,000ஐ கடந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் கணிசமாக அதிகரிக்கும்.
நிலநடுக்கம் ஏற்பட்டு கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்குப் பிறகும், இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் இருந்து ஏராளமான சடலங்கள் மீட்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.
இதேவேளை, உயிருடனும் பலர் மீட்கப்படுகிறார்கள்.
தென்மேற்கு துருக்கியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,674 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 72,879 ஆக உயர்ந்துள்ளது என்று துணை ஜனாதிபதி ஃபுவாட் ஒக்டே கூறினார்.
அண்டை நாடான சிரியாவில் குறைந்தது 3,377 பேர் உயிரிழந்தனர்.
இருநாடுகளிலும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை 21,051 ஆக உயர்ந்துள்ளது.
“நூற்றாண்டின் பேரழிவு” என்று துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் விபரித்தார்.
அத்துடன், அழிக்கப்பட்ட வீடுகளை ஓராண்டுக்குள் மீண்டும் கட்டுவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
இதேவேளை, துருக்கிக்கு 1.78 பில்லியன் டொலர் நிவாரணம் மற்றும் மீட்பு நிதி உதவியை வழங்குவதாக உலக வங்கி கூறியுள்ளது.
780 மில்லியன் டொலர்கள் உடனடியாக கிடைக்கும் என்று உலக வங்கி ஒரு அறிக்கையில் கூறியது. ஏற்கனவே துருக்கிக்கு உள்ள இரண்டு உலக வங்கி கடன் திட்டங்களிலிருந்து நிதி திருப்பி விடப்படும்.
துருக்கியின் மீட்பு மற்றும் புனரமைப்புக்கான மற்றொரு 1 பில்லியன் டொலர் உதவியும் தயாராகி வருகிறது, ஆனால் ஏற்பாடு செய்ய அதிக நேரம் எடுக்கும் என்று உலக வங்கியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சிரியா, துருக்கிக்கு 85 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை அமெரிக்கா வழங்கவுள்ளது
சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனம் [USAID] இந்த வாரம் பிராந்தியத்தில் பேரழிவு தரும் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து துருக்கி மற்றும் சிரியாவிற்கு அவசர மனிதாபிமான உதவியாக 85 மில்லியன் டொலர் வழங்குவதாகக் கூறியுள்ளது.