29.9 C
Jaffna
April 10, 2025
Pagetamil
உலகம்

துருக்கி, சிரியா பேரனர்த்தம்: உயிரிழப்பு 12,000ஐ கடந்தது!

கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலப்பகுதியில் உலகின் மிக மோசமான பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் தரைமட்டமான ஆயிரக்கணக்கான கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ள உயிர்பிழைத்தவர்களை மீட்புக்குழுவினர் தேடி வருகிறார்கள்.

கடந்த திங்கள்கிழமை அதிகாலையில் தென்கிழக்கு துருக்கி மற்றும் போரினால் நாசமடைந்த சிரியாவின் வடக்கு பகுதிகளை தரைமட்டமாக்கிய இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களின் பின்னர்,  ஆரம்பிக்கப்பட்ட மீட்புப்பணிகள் இன்னமும் தொடர்ந்து வருகிறது.

இரு நாடுகளிலும் பலி எண்ணிக்கை 12,049 ஆக உயர்ந்துள்ளது மேலும் வரும் நாட்களில் மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

துருக்கில் குறைந்தது 9,057 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 52,979 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் வடக்கு சிரியாவில் இறப்பு எண்ணிக்கை 2,992 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பரந்த பகுதியில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

வடமேற்கு சிரியாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு துருக்கி வழியாக ஐ.நா மனிதாபிமான உதவி வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது. நீண்டகாலத்தின் முன்னர் ஐ.நா இதேவழியாக சிரியாவில் உதவிகளை மேற்கொண்டது. எனினும், உள்நாட்டு போர், சர்வதேசதடைகளின் பின்னர் அவை நிறுத்தப்பட்டிருந்தன.

தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, தொடர்ச்சியான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் சிரியாவில் குறைந்தது 2,992 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

கிளிர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குறைந்தது 1,730 பேர் கொல்லப்பட்டனர், 2,850 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று சிரியாவின் சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.

அரச கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் டார்டஸ் மாகாணங்களில் குறைந்தது 1,262 பேர் கொல்லப்பட்டதாகவும், 2,285 பேர் காயமடைந்ததாகவும் சிரிய ஆட்சியின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிர் இழப்பு “உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறினார்.

அமெரிக்கா 150 க்கும் மேற்பட்ட தேடல் மற்றும் மீட்புப் பணியாளர்களை துருக்கிக்கு அனுப்பியுள்ளது. பேரழிவில் இருந்து மீண்டு வரும் துருக்கி மற்றும் சிரிய மக்களுக்கு அமெரிக்கா எவ்வாறு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்பது பற்றி வாஷிங்டன் இன்னும் சில நாட்களில் கூற வேண்டும்.

“உலக சுகாதார நிறுவனம் மருத்துவப் பொருட்களுடன் மூன்று விமானங்களையும் ஒருங்கிணைக்க உயர்மட்டக் குழுவை அனுப்பும்” என்று ஜெனீவாவில் நடந்த செய்தி மாநாட்டில், அதன் பணிப்பாளர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.

“ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயில் உள்ள எங்கள் தளவாட மையத்திலிருந்து மருத்துவப் பொருட்கள் மற்றும் அறுவை சிகிச்சை அதிர்ச்சி கருவிகளை எடுத்துக்கொண்டு ஒரு விமானம் தற்போது இஸ்தான்புல் செல்லும் வழியில் உள்ளது.”

டமாஸ்கஸுக்கு மற்றொரு விமானம் புறப்படுவதற்கு கிட்டத்தட்ட தயாராக உள்ளது, மூன்றாவது விமானம் திட்டமிடப்பட்டுள்ளது, அவர் மேலும் கூறினார்.

இரு நாடுகளின் உதவித் திட்டத்திற்காக உலக சுகாதார அமைப்பு தற்செயல் நிதியிலிருந்து 3 மில்லியன் டொலரை விடுவித்தது.

உடனடி மனிதாபிமான தேவைகளை ஆதரிப்பதற்காக 46 மில்லியன் டொலர் உதவிகளை ஐநா உணவு நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த நிதி அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு துருக்கி மற்றும் சிரியாவில் பாதிக்கப்பட்ட 500,000 பேருக்கு உதவப் பயன்படுத்தப்படும் என்று ஐ.நா துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“இது இன்னும் தயாராகவில்லை, ஆனால் தேவைகள் பற்றிய கூடுதல் தகவல்களைக் குவிப்பதால் வரும் நாட்களில் ஏதாவது ஒன்றை அறிவிக்க முடியும் என்று நம்புகிறோம். ஆனால் முதல் பணி, நிச்சயமாக, தேவைகளின் அளவு என்ன என்பதை துல்லியமாக அடையாளம் காண்பது,” என்றார்.

“நாங்கள் இப்போது ஒன்றாக உயிர்களைக் காப்பாற்ற கடிகாரத்தை எதிர்த்துப் போராடுகிறோம். விரைவில் நாங்கள் நிவாரண உதவிகளை வழங்குவோம். துருக்கி மற்றும் சிரியா ஐரோப்பிய ஒன்றியத்தை நம்பலாம்” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் வான் டெர் லேயன் ருவிட்டரில் எழுதினார்.

இரு நாட்டு மக்களுக்கு ஆதரவாக சர்வதேச சமூகத்திடம் இருந்து நிதி திரட்டுவதற்காக துருக்கி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து அடுத்த மாத தொடக்கத்தில் பிரஸ்ஸல்ஸில் மாநாடு நடத்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

“இது போன்ற ஒரு சோகம் ஒரு மக்களைத் தாக்கும் போது யாரும் தனியாக இருக்கக்கூடாது” என்று வான் டெர் லேயன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மீட்புப்பணிகளில் ஏராளம் சடலங்கள் மீட்கப்பட்டு வருவது பெரும் விரக்தியை ஏற்படுத்தினாலும், இடிபாடுகளிற்குள் சிக்கி ஆங்காங்கே மீட்கப்படும் சிலர் நம்பிக்கையை வளர்ப்பதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

61 மணித்தியாலம் இடிபாடுகளிற்குள் சிக்கியிருந்த  8 வயது பெயான் ஹடாப்,  மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விமர்சனங்கள்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு நாடுகளிலும் மீட்புப்பணியின் வேகம் குறித்து, பாதிக்கப்பட்டவர்களிடம் கடுமையான விமர்சனம் உள்ளது.

சிக்கியவர்களை மீட்பதற்கான உபகரணங்கள், நிபுணத்துவம் மற்றும் உதவியின் பற்றாக்குறை குறித்து பரவலான புகார்கள் உள்ளன.

“அரசு எங்கே? இரண்டு நாட்களாக எங்கே போனார்கள்? அவர்களிடம் மன்றாடுகிறோம். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டுத்தாருங்கள்”என சபிஹா அலினாக் என்ற பெண் துருக்கியின் மாலத்யா நகரில் ஊடகங்களில் ஆவேசமாக பேசினார். அவரது இளம் உறவினர்கள் சிக்கியிருந்த பனி மூடிய இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகே அவர் நின்று கொண்டிருந்தார்.

அண்டை நாடான சிரியாவிலும் இதே போன்ற காட்சிகள் மற்றும் புகார்கள் இருந்தன.

ஐக்கிய நாடுகள் சபைக்கான சிரியாவின் தூதர், அரசாங்கத்திற்கு “திறன்கள் மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறை” இருப்பதாக ஒப்புக்கொண்டார், ஆனால் இது நாட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலான உள்நாட்டுப் போர் மற்றும் மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் என்று குற்றம் சாட்டினார்.

திங்கட்கிழமை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் பிரதிபலிப்பில் “குறைபாடுகளை” துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ஒப்புக்கொண்டார், ஆனால் பேரழிவின் தீவிரம் மற்றும் குளிர்கால வானிலை ஆகியவை முக்கிய காரணிகள் என்று கூறினார்.

நிலநடுக்கம் ஹடேயின் விமான நிலையத்தில் ஓடுபாதையை அழித்ததால், மீட்புப்பணியின் வேகத்தை பாதித்தது.

“இது போன்ற ஒரு பேரழிவிற்கு தயாராக இருக்க முடியாது,” எர்டோகன் கூறினார். “எங்கள் குடிமக்கள் எவரையும் நாங்கள் கவனிக்காமல் விடமாட்டோம்.” என்றார்.

அரசாங்கத்தின் பதிலைப் பற்றி “மரியாதையற்றவர்கள்” “பொய்கள் மற்றும் அவதூறுகளை” பரப்புகிறார்கள் என்று விமர்சகர்களுக்கு அவர் பதிலடி கொடுத்தார்.

சிரியா மற்றும் துருக்கியில் உள்ள பல்லாயிரக்கணக்கான உள்ளூர் அவசரகால பணியாளர்களுடன் இரண்டு டஜன் நாடுகளின் தேடல் குழுக்கள் இணைந்துள்ளன.

ஆனால் நிலநடுக்கம் மற்றும் அதன் சக்திவாய்ந்த பின்அதிர்வுகளின் அழிவின் அளவு மிகவும் பயங்கரமானது. சிரியாவின் தற்போதைய போரினால் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பகுதி உட்பட – பரந்த பகுதியில் பலர் இன்னும் உதவிக்காக காத்திருக்கிறார்கள்.

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள் அல்லது அடிப்படைத் தேவைகளைப் பெறமுடியாமல் இருப்பவர்கள் உயிர்வாழும் சாளரம் வேகமாக மூடப்பட்டு வருவதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

“முதல் 72 மணிநேரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது,” என்று ஐக்கிய இராச்சியத்தில் உள்ள நாட்டிங்ஹாம் ட்ரெண்ட் பல்கலைக்கழகத்தின் இயற்கை ஆபத்து நிபுணர் ஸ்டீவன் காட்பி கூறினார். “சராசரியாக, 24 மணி நேரத்திற்குள் உயிர்வாழும் விகிதம் 74 சதவிகிதம், 72 மணி நேரத்திற்குப் பிறகு அது 22 சதவிகிதம் மற்றும் ஐந்தாவது நாளில் அது 6 சதவிகிதம் ஆகும்.” என்றார்.

மீட்புப் பணிகளில் பங்கேற்ற பிகல், வெப்பநிலை மைனஸ் 6 டிகிரி செல்சியஸாக (21 டிகிரி பாரன்ஹீட்) குறைந்ததால், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் உறைந்து போய் இறந்தனர் என்றார்.

இதையும் படியுங்கள்

சீனப் பொருட்கள் மீது 125% வரி விதித்த ட்ரம்ப்!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

இரவு விடுதி கூரை இடிந்து விழுந்து 79 பேர் பலி

Pagetamil

மிரட்டிக் கொண்டே பேச முடியாது!

Pagetamil

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகுவதாக ஹங்கேரி அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!